உ.பி.| வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளுக்கு தடை? முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு சொல்வதென்ன?
உத்தர பிரதேசத்தின் வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . இந்த நடவடிக்கையை அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
வடமாநிலங்களில் இன்று ஹோலி பண்டிகை வெகுவாக கொண்டாடப்பட இருக்கும் சூழலில், அதிக அளவில் ஒலி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் சூழல் ஏற்படும் என்பதால் , இதனால், ஒலி மாசு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ``உத்தர பிரதேசத்தின் வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடையை அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.
ஹோலி பண்டிகையின்போது அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. வழிபாட்டுத் தலங்களில் ஒலி மாசு ஏற்படுவதை நிரந்தரமாக கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மத வழிபாட்டு தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உத்தர பிரதேச வழிபாட்டுத் தலங்களின் ஒலி பெருக்கிகள் தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு மாநில அரசு பல்வேறு வழிகாட்டு நெறிகளை வெளியிட்டது. இதன்படி வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் சப்தம், அந்த வளாக அளவில் மட்டுமே இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தால் ஒலிபெருக்கிகளை காவல் துறை அகற்றலாம் என்று உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டது. அரசின் உத்தரவின்படி கடந்த 2023, 2024-ம் ஆண்டுகளில் உத்தர பிரதேசம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன.