ஹனுமன் சாதி என்ன ? உ.பி.யில் நடக்கும் வார்த்தை போர்

ஹனுமன் சாதி என்ன ? உ.பி.யில் நடக்கும் வார்த்தை போர்
ஹனுமன் சாதி என்ன ? உ.பி.யில் நடக்கும் வார்த்தை போர்

ஹனுமன் இந்துவா, முஸ்லிமாக, தலித்தா என பல்வேறு வார்த்தை போர் அரசியல் தலைவர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

5 மாநிலத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அப்போது ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹனுமன் ஒரு வனவாசி, அவர் ஒரு தலித் என தெரிவித்திருந்தார். யோகி ஆதித்யநாத்தின் இந்த கருத்து அப்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஹனுமன் குறித்த பேச்சே அரசியல் தலைவர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. உத்தரப்பிரேதேசத்தை சேர்ந்த பாஜக கவுன்சிலரான புக்கல் நவாப், ஹனுமன் ஒரு முஸ்லிம் என கூறியுள்ளார். ஒட்டுமொத்த உலகிற்கு ஹனுமன் சொந்தக்காரர் எனவும், அனைத்து மத மக்களும் ஹனுமனை விரும்புவதாகவும் குறிப்பிட்டார். இருந்தாலும் ஹனுமன் ஒரு முஸ்லிம் என தெரிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அனைவரையும் வியக்க வைக்கிறது.

முஸ்லிம் மதத்தில் இருக்கும் பெயர்களை போன்று அதாவது ரெஹ்மான், ரம்சான், ஜிஷான், சுல்தான் உள்ளிட்ட பெயர்களை போன்று ஹனுமான் பெயரும் இருப்பதால் ஹனுமான் ஒரு முஸ்லிம் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

ஹனுமான் ஒரு தலித், முஸ்லிம் என்ற பேச்சுகள் ஒரு புறம் இருக்க உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் லஷ்மி நாராயணன் சவுத்ரி, ஹனுமன் ஜாட் பிரிவை சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார். ராமாயணத்தில் சீதாவை ராவணன் கடத்திச் சென்றார். அப்போது ஹனுமான் தான் அந்த பிரச்னையில் தலையிட்டு ராமனுக்கு உதவினார். உண்மையில் ஹனுமனுக்கு இந்தப் பிரச்னையில் எந்த தொடர்பும் இல்லாதபோது அவர் இப்பிரச்னையில் தலையிட்டார். இதேபோன்றே மனநிலையில் ஜாட் பிரிவு மக்கள் இருப்பதால் ஹனுமன் ஜாட் பிரிவை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதுகிறேன் என தெரிவித்தார். ஒருவர் ஹனுமனை முஸ்லிம் என தெரிவிக்க மற்றொருவரோ அதற்கு மறுப்பு தெரிவிக்க.. இப்போது ஹனுமன் குறித்து பேச்சுகள் தான் அரசியல் தலைவர்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com