தவறான ஊசியால் இறந்த சிறுமி? சடலத்தை தூக்கி எறிந்த மருத்துவமனை ஊழியர்கள்! உ.பியில் அதிர்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேசத்தில் சிறுமி ஒருவருக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டு இறந்ததாக மருத்துவமனை மீது அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உ.பி.. சிறுமி
உ.பி.. சிறுமிட்விட்டர்

உத்தரப்பிரதேசம் மாநிலம் கிரிரோர் பகுதியில் உள்ள கர்ஹால் சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை, அவரது அத்தை, அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவர் ஊசி ஒன்றைச் செலுத்தியுள்ளார். பின்னர், சிறுமி நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், கொஞ்ச நேரத்தில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து, அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், அந்தச் சிறுமி அதற்குள்ளேயே உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்துக்கூட சிறுமியின் உறவினர்களிடம் விஷயத்தை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை. மேலும், இதனால் பதறிய அந்த மருத்துவமனை நிர்வாகம், உடனே அந்தச் சிறுமியின் உடலை வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது வீசி எறிந்துவிட்டு, அங்குள்ள அனைவரும் ஓட்டம் பிடித்துள்ளனர். சிறுமியின் உறவினர்களின் கோபத்திற்கு பயந்தே மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனத்தில் வீசப்பட்ட அந்தச் சிறுமியின் சடலம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதன் விசாரணையில் மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி, அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த மருத்துவமனையில் பணி புரிந்த மருத்துவரின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த மருத்துவமனையின் பதிவை ரத்து செய்யவும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்ற சம்பவங்களை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநில அரசும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com