பாலியல் புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: தூக்கில் தொங்கிய பெண்
பாலியல் புகாரை போலீசார் ஏற்க மறுத்த நிலையில், வேதனையடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரை சேர்ந்த பெண் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இவர் செங்கல் சூளை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். இதனிடையே சுமதிக்கு இரண்டு நபர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். எனவே தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இருவருக்கும் தக்க தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற தைரியம் கொண்ட சுமதி தன் கணவருடன் சேர்ந்து புகானா போலீஸ் நிலையம் சென்றார். ஆனால் போலீசார் சுமதியின் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.
போலீசாரால் தனக்கு நீதி கிடைக்கும் என நினைத்த சுமதிக்கு, போலீசார் புகாரை ஏற்க மறுத்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியுது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். சுமதியின் பாலியல் புகாரை ஏற்க மறுத்தது தொடர்பாக உதவி ஆய்வாளர் சுபாஷ் சாந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுமதி பாலியல் புகார் கூறிய இரண்டு நபர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.