“இந்திய மக்கள் மோடியை அதிகம் நேசிக்கின்றனர்” - ட்ரம்ப்
இந்திய மக்கள் பிரதமர் மோடியை அதிகம் நேசிக்கின்றனர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெல்லி மவுரியா நட்சத்திர விடுதியில் இருந்து இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ட்ரம்ப் மற்றும் அவரது மனைவியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை ட்ரம்புக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அதேபோல், அமெரிக்க அதிகாரிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ட்ரம்ப் அறிமுகப்படுத்தினார். பின்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருக்கு காந்தி உருவச்சிலை பரிசாக அளிக்கப்பட்டது. நினைவிட வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் ட்ரம்ப் நட்டுவைத்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார். 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ட்ரம்ப் “ஆயிரக்கணக்கான மக்கள் கூடி என்னை வரவேற்றது எனக்கு மிகப்பெரிய பெருமை. இந்திய மக்கள் பிரதமர் மோடியை மிகவும் நேசிக்கின்றனர். நேற்று மைதானத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். ஒவ்வொரு முறையும் மோடியை பற்றி கூறும்போது அவர்கள் கரவொலி எழுப்பி என்னை ஊக்கப்படுத்தினர்” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பேசும்போது “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகக் குழுவை வரவேற்கிறேன். இந்த நாட்களில் நீங்கள் பிஸியாக இருப்பதை நான் அறிவேன். இருந்தாலும் இந்திய வருகைக்கு நேரம் ஒதுக்கியுள்ளீர்கள். நான் இதற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "சுகாதாரத்துறையிலும், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்பாகவும், மனநலம் குறித்தும், இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ட்ரம்ப் மீண்டும் இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளேன். இந்தியாவும் அமெரிக்காவும் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நட்பு நாடு. வர்த்தகத்துறையில் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தினோம். விரைவில் நல்ல முடிவு வரும்” எனக் குறிப்பிட்டார்.