'இந்திய வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறோம். ஆனால்...' - அமெரிக்க அரசின் நிலைப்பாடு
இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்துள்ளது. இந்த சட்டங்கள் மூலம் இந்திய சந்தைகளின் செயல்திறன் மேம்படும் என்றும், அதிகளவில் தனியார் துறை முதலீட்டை ஈர்க்க உதவும் என்றும் பைடன் அரசு கூறியுள்ளது. அதேவேளையில், விவசாயிகளின் அமைதிப் போராட்டமும் ஜனநாயகத்தின் அடையாளம் என்று கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், "அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்தவொரு வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் ஓர் அடையாளமாகும் என்பதை நாங்கள் உணர்கிறோம். இந்திய உச்சநீதிமன்றமும் அதையே கூறியுள்ளது என்பதை நினைவில் கொள்க" என்று கூறினார்.
மேலும் "இரு தரப்புகளுக்கு இடையிலான வேறுபாடுகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஊக்குவிக்கிறோம். பொதுவாக, இந்தச் சட்டங்கள் மூலம் இந்தியாவின் சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், அதிக தனியார் துறை முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா வரவேற்கிறது" என்றார்.
இந்தியாவில் புதிதாக இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26 முதல் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 26, குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையே நடந்த 12 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. தற்போது உலகின் பல்வேறு பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட்களை வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு இந்திய அரசு அதிருப்தி வெளியிட்டதும் கவனிக்கத்தக்கது.