US Approves India’s Russian Oil Purchase Rahul Attacks PM
ராகுல், மோடிஎக்ஸ் தளம்

ரஷ்யாவிடம் மீண்டும் எண்ணெய்.. இந்தியாவுக்கு அமெரிக்கா ஒப்புதல்.. பிரதமரைச் சாடிய ராகுல்!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அமெரிக்கா 30 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ள விவகாரம், தற்போது மிகப்பெரிய அரசியல் விவாதமாகஉருவெடுத்துள்ளது.
Published on

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்ததை அடுத்து, பிரதமர் மோடியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதற்காக அமெரிக்கா, இந்தியாவுக்கு 50% வரி விதித்திருந்தது. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வராத நிலையில், இது தொடர்ந்தது. இதற்கிடையே இரு நாடுகளின் பேச்சுவார்த்தையின்போது, ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தியா மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்க உச்ச நீதிமன்றம், ட்ரம்ப் விதித்த வரியைத் தடை செய்து உத்தரவிட்டது. ஆனாலும் ட்ரம்ப், சட்டப் பிரிவு 122-ஐப் பயன்படுத்தி அனைத்து நாடுகள் மீதும் மீண்டும் 10 சதவீத வரி விதிப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய்க் கொள்முதலை நிறுத்திய இந்தியா, அமெரிக்காவின் பேரில் வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்கத் தொடங்கியது.

venezuela sends crude oil to india as exports
கச்சா எண்ணெய்புதிய தலைமுறை

இந்தச் சூழலில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து தாக்கி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் தாக்கி வருகிறது. இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் விநியோகமும் சீர்குலைந்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியும் உருவாகியுள்ளது. இது, இந்தியாவுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அமெரிக்கா 30 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது.

அமெரிக்க கருவூலத் துறை சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கடலில் ஏற்கெனவே தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெய்யை மட்டும் இறக்குமதி செய்ய இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஏப்ரல் 4, 2026 வரை (30 நாட்கள்) தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும், இந்தியா இனிவரும் காலங்களில் அமெரிக்க எண்ணெய்யையே அதிகம் வாங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவ்விவகாரம், தற்போது மிகப்பெரிய அரசியல் விவாதமாகஉருவெடுத்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் வெளியுறவுக் கொள்கை பலவீனமடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது மக்களின் விருப்பம், வரலாறு மற்றும் புவியியல் அமைப்பைச் சார்ந்து இருக்க வேண்டும். ஆனால் இன்று நடப்பது ஒரு 'கொள்கை' அல்ல; மாறாக, நாட்டின் பலவீனமான நிலைப்பாட்டின் வெளிப்பாடு. நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும், யாரிடம் வாங்கக் கூடாது என்பதை அமெரிக்கா தீர்மானிக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி, அமெரிக்காவே முடிவு செய்கிறது. கடந்த பிப்ரவரி 11, 2026 அன்று மக்களவையில் பேசியபோதே, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு சமரசம் செய்யப்படுவது குறித்து தான் எச்சரித்ததாக ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் வெட்கக்கேடானது என்று அவர் சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com