2016-ல் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலின் போது எந்த ஒரு வீரரும் உயிரிழக்க கூடாது என்பதில், தான் உறுதியாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'. கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி இரவு காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் ராணுவ முகாம் மீது வெடிகுண்டுகளை வீசி, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
இதனையடுத்து செப்டம்பர் 28-ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி 29-ஆம் தேதி அதிகாலை வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்த இந்திய ராணுவ சிறப்புப் படை வீரர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தினர். நள்ளிரவில் தொடங்கிய தாக்குதல் அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது. இந்தத் தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்தத் துல்லிய தாக்குதல் குறித்து பிரதமர் மோடி இன்று பேசினார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த பிரதமர், துல்லியத் தாக்குதல் என்பது இந்திய ராணுவத்தினரின் துணிச்சலான நடவடிக்கை என்றும், அப்போது தன் கவலை எல்லாம் வீரர்களை குறித்து மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தார். தாக்குதலில் பங்கு கொண்டுள்ள வீரர்கள் யாரும் உயிரிழக்கக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ராமர் கோயில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்தியது. சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர் கோயிலுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா குறித்த கேள்விக்கு, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை. அவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக சிறப்பாக பணியாற்றினார். சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக 6 மாதங்களுக்கு முன்பே உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து என்னிடம் தெரிவித்தார் என்று மோடி பதில் அளித்தார். மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தல், மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதலாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.