மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புல்வாமா வரை !

மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புல்வாமா வரை !

மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புல்வாமா வரை !

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விடுப்பில் சொந்த ஊர் சென்று, பின் மீண்டும் பணியில் சேர வந்த வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 350 கிலோ வெடிபொருட்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். 

இந்நிலையில் உரியில் நடந்த தாக்குதலும் அதற்கு இந்தியா கொடுத்த பதிலடியையும் பார்ப்போம்.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியின் உரி நகரிலுள்ள ராணுவத்தின் முகாமில்  ஜைஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்தியா ராணுவத்தின் 12வது பிரிகேட்டின் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு 2016 ஜூலை மாதத்தில் ஹிஸ்புல் முஜாகிதீனின் தலைவர் புர்கான் வாகினி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து காஷ்மீர் பகுதிகளில் பயங்கர கலவரம் நடந்துவந்தது.  அப்போது வரை நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் உரி தாக்குதல் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாக  பார்க்கப்பட்டது. 

இத் தாக்குதலை தொடர்ந்து நடந்த விசாரணையில் பயங்கரவாதிகள் அதிகாலை 5:30 மணியளவில் ராணுவ முகாமிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. மேலும் அவர்கள் பயன்படுத்திய ஜிபிஎஸ் கருவியின் மூலம் பாகிஸ்தானிற்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்புடையது தெரியவந்தது. 

இந்தத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’என்ற ஒன்றை திட்டமிட்டது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்பது எதிரிகளின் இலக்குகளை குறிவைத்து நடத்தும் அதிவேக தாக்குதல் நடவடிக்கை. அத்துடன் இந்த தாக்குதலில் தாக்குதல் நடத்தும் தரப்பிற்கு மிக குறைந்த பொருள் மற்று வீரர்கள் சேதம் இருக்கும். சர்ஜிக்கல் ஸ்டிரைக்  நடத்துவதற்கு தகுந்த திட்டமிடல் மற்றும் சிறந்த செயலாக்கம் முறை வேண்டும். 

இந்தியா தரப்பில் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைப் பகுதியை கடந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை சென்று அதிரடி தாக்குதல் நடத்தினர்.  அதாவது பிம்பர் (Bhimber),ஹாட்ஸிபிரிங் (Hotspring), கேள் (Kel)மற்றும் லிபா (Lipa)சேக்டார்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. சரியாக நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின்  ஏவுகணை செலுத்தும் 7 இடங்கள் தகர்க்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 38 பயங்கரவாதிகள் மற்றும் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா தரப்பில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதல்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில் தற்போது புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் 2016ல் உரியில் நடந்த தாக்குதலைவிட மிகவும் சக்திவாய்ந்த வெடி பொருட்களை கொண்டு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலையும் ஜைஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தின் பதிலடி என்ன என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com