ஜெயலலிதா மரணம் தொடர்பாக, மாநிலங்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது.
மாநிலங்களவை இன்று காலை கூடியதும், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்களான மைத்ரேயன் உள்ளிட்டோர், கையில் பதாகைகளை ஏந்தியவாறு அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர். ஜெயலலிதா மரணம் குறித்து, மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும், மக்கள் மனதில் எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். சசிகலா புஷ்பா எம்.பி.யும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அவர்களுடன் சேர்ந்து நின்று முழக்கமிட்டார்.
சிறிது நேரத்துக்குப் பின்னர் மைத்ரேயன் பேசுவதற்கு துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அனுமதியளித்தார். அவர் பேச தொடங்கியபோது, அ.தி.மு.க எம்.பி. விஜிலா சத்யானந்த் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவையில் கடும் அமளி நிலவியது. விஜிலா சத்யானந்தின் செயல்பாடுகளை பி.ஜே.குரியன் ஆட்சேபித்தார். எனினும் அவர் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டிருந்ததால் விஜிலா சத்யானந்தத்துக்கு பி.ஜ.குரியன் கண்டனம் தெரிவித்தார். இதற்கு மத்தியில் பேசிய மைத்ரேயன், ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.