ஓடும் ரயிலில் செல்போன் திருடினாரா? தூக்கி வீசப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம்

ஓடும் ரயிலில் செல்போன் திருடினாரா? தூக்கி வீசப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம்
ஓடும் ரயிலில் செல்போன் திருடினாரா? தூக்கி வீசப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம்

உ.பி.யில் ஓடும் ரயிலில் செல்போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர், ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் "அயோத்தி கான்ட் ஓல்டு டெல்லி எக்ஸ்பிரஸ்" ரயிலில் பயணி ஒருவரிடமிருந்து கைபேசியை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர், ஓடும் ரயிலில் இருந்து கொடூரமாக தாக்கப்பட்டு வெளியே தூக்கி வீசப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள தில்ஹர் ரயில் நிலையத்திற்கு அருகே, 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் ரயில் பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் குழாயில் தலை அடிபட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், செல்போனை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞரை தாக்கும்போது, சக பயணிகள் கேலி செய்வதையும், நரேந்திர துபே என்று அடையாளம் காணப்பட்டுள்ள நபர், அந்த இளைஞரை கடுமையாக தாக்குவதும், தன்னை விடுவிக்க அந்த இளைஞர் கெஞ்சுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில் கொடூரத்தின் உச்சமாக, ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது அந்த இளைஞரை தூக்கி வெளியே வீசினார் அந்த நபர்.

காவல்துறையினரின் தகவலின்படி திருடுபோன மொபைல் மீட்கப்பட்டதும், ஆத்திரமடைந்த கும்பல், அந்த இளைஞரை சுமார் அரை மணி நேரம் சரமாரியாக தாக்கி, ரயிலில் இருந்து வெளியே வீசி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த நபரின் தலையில் பலத்த காயம் மற்றும் ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து குற்றவாளி, பரேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் உயிரிழந்த இளைஞர் தொடர்பான எந்த தகவலும் இல்லை. அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com