உயிரோடு திரும்பிய இறந்த பெண்.. செய்யாத கொலைக்கு 7 வருஷம் சிறையில் வாடிய அப்பாவி..!

உயிரோடு திரும்பிய இறந்த பெண்.. செய்யாத கொலைக்கு 7 வருஷம் சிறையில் வாடிய அப்பாவி..!
உயிரோடு திரும்பிய இறந்த பெண்.. செய்யாத கொலைக்கு 7 வருஷம் சிறையில் வாடிய அப்பாவி..!

இறந்தவர்கள் திரும்பி வருவார்கள் என்ற பேச்செல்லாம் சினிமாவில் மட்டும்தான் எடுபடும் என்று எண்ணியிருப்பீர்கள். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பதும் உத்தர பிரதேசத்தில் தூசித் தட்டிய வழக்கின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

உயிரிழந்ததாக நினைத்த பெண் தற்போது உயிரோடு இருப்பதாகவும் திருமணமாகி குழந்தைகளுடன் சுகபோகமாக வாழ்ந்து வருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இறந்ததாக எண்ணப்பட்ட பெண்ணை கொன்றதாக குற்றஞ்சாட்டி அப்பாவி நபர் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக அலிகாரில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

வழக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? இறந்த பெண் எப்படி உயிரோடு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டார்? சிறைவாசம் சென்றவர் விடுவிக்கப்பட்டாரா? என்ற கேள்விகளுக்கான விளக்கங்களை காணலாம்:

கடந்த 2015ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர் அருகே இருந்த கோவிலுக்கு சென்றவர் காணாமல் போயிருக்கிறார். அதன்படி 2015ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி 17 வயது சிறுமியின் தந்தை அலிகாரில் உள்ள காவல் நிலையில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்திருக்கிறார்.

அதன் பேரில் 363, 366 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த காணாமல் போன சிறுமியை தேடி வந்தார்கள். சில நாட்கள் கழித்து இறந்த பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அதன் பேரில் விசாரித்ததில் அந்த சடலம் காணாமல் போன 17 வயது சிறுமி என உறுதிப்படுத்தியதோடு அந்த சிறுமியை விஷ்ணு என்பவர்தான் கொன்றார் எனக் குறிப்பிட்டு அந்த நபரும் கைது செய்து அலிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இப்படி ஏழு ஆண்டுகளாக விஷ்ணு சிறையில் இருக்கும் நிலையில், அந்த வழக்கில் புதிதாக ஒரு துப்பு கிடைத்தது சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஏனெனில் இறந்துவிட்டதாக கருதிய அந்த சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு உயிரோடு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

உயிரோடு இருப்பதோடு, திருமணமாகி இரண்டு குழந்தைகளும் அந்த பெண்ணுக்கு இருக்கிறதாம். 17 வயதாக இருந்தபோது கோவிலுக்கு செல்வதாகச் சொல்லி வீட்டை விட்டு தனது காதலனுடன் ஹத்ரஸ் மாவட்டத்துக்கு ஓட்டம் பிடித்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் விஷ்ணு கொலைகாரர் என முத்திரைக் குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் விஷ்ணுவின் அம்மா தன் மகனை குற்றமற்றவர் என நிருபீக்க கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என ஏறி இறங்கியும் பலனளிக்காததால் தானே களத்தில் இறங்கி ஆதாரத்தை திரட்டியிருக்கிறார். அதன்படியே உயிரிழந்ததாக நினைத்த அந்த பெண் ஆக்ராவில் குடும்பத்தோடு வசித்து வந்ததை சில இந்து அமைப்பின் உதவியோடு அறிந்திருக்கிறார்.

இதனையடுத்து அலிகார் காவல்துறையை நாடி நடந்ததை தெரிவிக்கவே, ஹத்ராஸ் கேட் பகுதியில் இருந்த அந்த பெண்ணை கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் DNA பரிசோதனை செய்ய போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் வழக்கை வாபஸ் பெறச் சொல்லியும் கைதான் பெண்ணின் குடும்பத்தினர் விஷ்ணுவின் தாயிடம் சமரசம் பேச்சை தொடங்கியிருக்கிறார்களாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com