உ.பி. மேலவைத் தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்தார் யோகி
உத்தரப்பிரதேச சட்டமேலவை இடைதேர்தலுக்கு, பா.ஜ.க சார்பில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்தும், துணை முதலமைச்சராக கேசவ் பிரசாத் மெளரியாவும் பதவி வகித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவருமே உ.பி.யின் சட்டப்பேரவை அல்லது சட்டமேலவை ஆகிய இரண்டு அவைகளிலுமே உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. இவர்களை தவிர்த்து அமைச்சர்களாக உள்ள சுதந்திர தேவ் சிங், மொசின் ராசா, தினேஷ் சர்மா ஆகியோரும் சட்டமன்றத்தில் அங்கம் வகிக்காமல் உள்ளனர்.
இதனால் முதலமைச்சர் யோகி உள்ளிட்ட 5 பேரும் செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் சட்டப்பேரவை அல்லது சட்டமேலவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் உத்தரப்பிரதேச சட்டமேலவைக்கான இடைத்தேர்தல் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக முதலமைச்சர் யோகி, துணை முதலமைச்சர் மற்றும் 3 அமைச்சர்கள் ஆகிய 5 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.