காரை நிறுத்தாமல் சென்றதால் சுட்ட போலீஸ் - ஆப்பிள் மேனேஜர் உயிரிழப்பு

காரை நிறுத்தாமல் சென்றதால் சுட்ட போலீஸ் - ஆப்பிள் மேனேஜர் உயிரிழப்பு
காரை நிறுத்தாமல் சென்றதால் சுட்ட போலீஸ் - ஆப்பிள் மேனேஜர் உயிரிழப்பு

லக்னோ நகரில் உள்ள ஆப்பிள் நிறுவன அலுவலகத்தில் மேனேஜராக பணிபுரிந்தவர் விவேக் திவாரி(38). இவர் இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு தனது சக ஊழியர் சனா என்பவருடன் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது, லக்னோவின் கோம்திநகர் எக்ஸ்டன்சன் பகுதியில் சென்ற காரை நோக்கி, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி சவுத்ரி தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயம் அடந்த திவாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து சவுத்ரி கூறுகையில், “விளக்கு அணைக்கப்பட்ட நிலையில், சந்தேகிக்கப்படும் வகையில் கார் சென்றது. அந்த காரை நிறுத்த முயன்ற போது, திவாரி என்னை மூன்று முறை கொல்ல முயன்றார். என்னை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு சுட்டேன்” என்று விளக்கம் அளித்தார். 

ஆனால், திவாரியுடன் காரில் பயணம் செய்த பெண் கூறுகையில், “இரண்டு போலீஸ் அதிகாரிகள் திவாரியின் காரினை நிறுத்த முயன்றார்கள். ஆனால் அவர் நிறுத்தவில்லை. நான் காரின் உள்ளே தான் இருந்தேன். பின்னர் இரண்டு அதிகாரிகளும் தங்களுடைய காரினை எங்கள் காருக்கு முன்னாள் நிறுத்தினார்கள். போலீஸ் அதிகாரிகளுள் ஒருவர் உடனடியாக எங்கள் அதிகாரி திவாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், போலிஸின் பைக் மீது மோதிய பின்னர் சிறிது தூரம் காரினை ஓட்டிச் சென்று ஒரு போஸ்ட் கம்பத்தில் மோதி நிறுத்தினார் திவாரி” என்றார்.

“என்னுடைய கணவரை சுட்டுக் கொல்ல போலீஸுக்கு உரிமை இல்லை. உத்தரப்பிரதேச முதலமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும். என்னுடைய கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட விஷயமே எனக்கு தெரிவிக்கப்படவில்லை. அவர் வீட்டிற்கு வருவார் என்று நான் காத்துக் கொண்டிருந்தேன். இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், போலீஸ் துறையில் வேலையும் அளிக்க வேண்டும்” என்கிறார் திவாரியின் மனைவி கல்பனா. 

இதுகுறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “இது என்கவுண்ட்டர் இல்லை. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால், இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும்” என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு போலீஸ் அதிகாரிகளுடம் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com