128 கோடி ரூபாய் மின் கட்டணம் - வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி
உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு, மின்சார கட்டணமாக 128 கோடி ரூபாய் விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் பகுதியில் ஷமிம் வயதான முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவரும் அவரது மனைவியும் வீட்டில் வசித்து வந்தனர். இவரின் வீட்டின் இந்த மாததிற்கான மின்சார கட்டணம் 128 கோடி வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷமிம் மின்சார அதிகாரிகளிடம் கேட்டப்போது, “இந்த மின் கட்டனத்தை செலுத்தாமல் விட்டால் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஷமிம் செய்தியாளர்களிடம், “நான் இந்தக் கட்டணம் குறித்து புகார் தெரிவிக்க மின்சார அலுவலகம் சென்றேன். அங்கு யாரும் என்னுடைய குறையை கேட்கவில்லை. இந்தத் தொகையை என்னால் எப்படி செலுத்த முடியும். பொதுவாக என்னுடைய வீட்டிற்கு மின்சார கட்டணம் 700 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை வரும். ஆனால் இம்முறை மின்சார அதிகாரிகள் என் வீட்டிற்கு கட்டணம் தராமல் மொத்த ஊருடைய கட்டணத்தை எனக்கு மின்சார கட்டணமாக அனுப்பி வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் அளித்த மின்சாரத்துறை துணை பொறியாளர், “இது தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்து அவருக்கு உரிய மின் கட்டணத்திற்கான ரசீது வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.