சூதாட்டத்தில் மனைவியை தோற்ற கணவன்: பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள் மீது வழக்கு!
சூதாட்டத்தில் நண்பர்களிடம் மனைவியை தோற்ற கணவர், அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வதற்கு அனுமதி அளித்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்புர் மாவட்டத்தில் உள்ள ஜஃபாராபாத் பகுதியை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது இளம் மனைவி உஷா (பெயர் ஒரிஜினல் அல்ல). குமார் எப்போதும் போதையில் இருப்பவர். இவரது நண்பர்கள் அருண், அனில் ஆகியோர் தினமும் இவர் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். மது குடித்து முடிந்ததும் சூதாட்டத்தில் ஈடுபடுவார் கள். ஒரு நாள் போதை உச்சத்துக்குச் செல்ல, தனது மனைவியை சூதாட்டத்தில் வைத்து விளையாடிய குமார் தோற்றார். இதையடுத்து நண்பர்கள் அருண் மற்றும் அனில் ஆகியோர் தனது மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்தார். அவர்கள் உஷாவை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதை சகிக்காத உஷா, தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். சில மாதங்கள் பொறுத்திருந்த குமார், பிறகு மனைவியிடம் மன்னிப்புக் கேட்டார். ’தெரியாமல் அப்படி நடந்துக்கொண்டேன். இனி அப்படி எந்த தப்பும் நடக்காது, சூதாடவும் குடிக்கவும் மாட்டேன்’ என்று சத்தியம் செய்தார். அதை நம்பி அவருடன் காரில் ஏறினார் உஷா.
கார் பாதி வழியில் வந்துகொண்டிருக்கும்போதே, தனது நண்பர்களுக்கு போன் செய்தார் குமார். அவர்கள் பாதி வழியில் காரில் ஏறி, உஷாவை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதிர்ச்சி அடைந்த உஷா, தன் கணவர், அவர் நண்பர்கள் மீது ஜஃபாராபாத் போலீசில் புகார் செய்தார். அவர்கள் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் நீதிமன்றத்துக்குச் சென்றார். நீதிமன்றம் புகாரை பதிவு செய்ய கூறியதை அடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குமாரையும் அவர் நண்பர்களையும் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.