கொரோனா நெகட்டிவ் என ரிப்போர்ட் தர ரூ.2500: உபி மருத்துவமனை கொடூரம்!!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா நெகட்டிவ் என ரிப்போர்ட் தருவதற்கு ரூ.2500 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் கொரோனா பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக பரிசோதனைகள் செய்ய அரசுகள் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. பல தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு கட்டணத்தையும் அரசு நிர்ணயம் செய்துள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா நெகட்டிவ் என அறிக்கை தருவதற்கு ரூ.2500 வசூலிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதை அடுத்து தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் பரவிய அந்த வீடியோவில் ஒரு நபர் , கொரோனா நெகட்டிவ் என ரிப்போர்ட் தர மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு ஆகும் செலவு குறித்தும் பேசுகிறார்.
இது குறித்து தெரிவித்துள்ள மீரட் மாஜிஸ்திரேட், வீடியோ வைரலானதை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.