இந்தியா
மணப்பெண்ணை அழைத்து வர 100 கி.மீட்டர் சைக்கிளில் பயணித்த மணமகன்
மணப்பெண்ணை அழைத்து வர 100 கி.மீட்டர் சைக்கிளில் பயணித்த மணமகன்
நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக மணமகன் ஒருவர் 100 கி.மீட்டர் சைக்கிளில் பயணித்திருக்கிறார்.
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொது போக்குவரத்து உட்படப் பல சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு திருமண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்கள், கோயில் திருவிழாக்கள் போன்ற பலவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகவே ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட திருமணங்களைத் தள்ளி வைக்க விரும்பாமல், வீடியோ கால் மூலமாக அதே குறிப்பிட்ட தேதியில் மண விழாவை நடத்தி வருகின்றனர். ஆனால் சிலர் இதற்கு ஒரு படி மேலே சென்று பல சாகச காரியங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்திரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் வசிக்கும் மணமகன் ஒருவர், ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்த வேளையில் 100 கி.மீட்டர் சைக்கிளில் பயணித்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணம்புரிவதற்காகச் சென்று மிதிவண்டியிலேயே வைத்து அழைத்து வந்துள்ளார். இதற்காக இவர், ஹமீர்பூரிலிருந்து மஹோபா மாவட்டம் வரை சைக்கிளில் சென்றுள்ளார்.
அதாவது மணமகனான கல்கு பிரஜாபதி, ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பவுதியா கிராமத்தில் வசித்து வருகிறார். மஹோபா மாவட்டத்தில் புனியா கிராமத்தில் உள்ள தனது மணமகள் ரிங்கியின் வீட்டிற்குச் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.
கடந்த திங்கள்கிழமையன்று இவரது பயணத்தைத் தொடங்கி அன்று மாலையே மணமகளின் வீட்டை அடைந்துள்ளார். இது குறித்து 25 வயது மணமகனான கல்கு, “வேறு யாரையும் என்னுடன் வர காவல்துறை அனுமதிக்கவில்லை. திருமணத்தை ஒத்திவைக்க வேண்டாம், திருமணத்திற்குத் தனியாகச் செல்ல வேண்டாம் என்று எனது நண்பர்கள் எனக்கு அறிவுறுத்தினர். நான் ஒரு வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத திருமணத்தை விரும்பினேன். ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில் இது நடக்கும் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை” ஐ.ஏ.என்.எஸ் செய்திக்குப் பேசியுள்ளார். மேற்கொண்டு இந்த ஜோடிக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை பாபா தனியாதாஸ் ஆசிரமத்தில் திருமணம் நடந்துள்ளது.

