உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உத்தரப்பிரதேச அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக அம்மாநில அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியாவும், கமல் ராணி வருணும் சென்றனர். அப்போது அங்கிருந்த உள்ளூர் மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும், அவர்களை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
காவல்துறையினர் போராட்டக்காரர்களை விரட்டி அடித்து அமைச்சர்களை கிராமத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கமல் ராணி வருண், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனிடையே வன்கொடுமை சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உத்தரப்பிரதேச அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கக்கோரி டெல்லியில் இளைஞர் காங்கிரஸார் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடத்தினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றதால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறையினர் கலைக்க முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.