ஹத்ராஸ் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு பிரமாண பத்திரம் தாக்கல்.!
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் வன்கொடுமை செய்து, கொல்லப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது பெண்ணின் மரணம் நாடு முழுவதும் மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் துரிதமாக விசாரணை மேற்கொள்ளவும், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தரும் நோக்கிலும் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த வழக்கு விசரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜராகி வாதாடினார். இவர் நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்காக ஆஜரானவர்.
“வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை நேரத்தில் எரிக்கப்பட்டது. அதற்கு அவரது குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுத்ததால் அவர்களது முன்னிலையில் தான் இறுதி சடங்குகள் நடைபெற்றன.
ஹத்ராஸ் வழக்கின் விசாரணை தொடர்பாக மைய அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
அதே நேரத்தில் எதிர் கட்சிகள் இதனை பயன்படுத்தி பா.ஜ.க அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும் முற்பட்டு வருகின்றன” என இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
சாதிய மோதல்களுக்கு வழிவகுக்கும் சதித்திட்டங்களை தீட்டுதல் மற்றும் போராட்டம் என இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 19 எப்.ஐ.ஆரை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
சில சமூக விரோதிகள் மாநிலத்தில் சாதிய வன்முறையை கட்டவிழ்த்து விடும் நோக்கில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
SIT அதிகாரிகள் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் உடலை உ.பி போலீசார் எரித்த இடத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.