
சக மாணவர் மீது பாலியல் புகார் கூறிய மாணவியை, பள்ளியிலிருந்து வெளியே செல்லும்படி கேட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். சுதாவிற்கு அவரது வகுப்பில் பயிலும் சக மாணவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சுதா, பள்ளி முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் புகாருக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்காத பள்ளி முதல்வர், மாணவியை தரக்குறைவாக நடத்தியுள்ளார்.
அதாவது, “இப்படிப்பட்ட ஒழுக்கம் குறைவான மாணவி இங்கே படிக்க வேண்டாம். இதன்மூலம் பள்ளிக்குத் தான் அவமானம் ஏற்படும். எனவே பள்ளியிலிருந்து நீங்களாகவே விலகிக் கொள்ளுங்கள்”என சுதாவை பள்ளி முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். புகார் கொடுத்த மாணவியை பள்ளி முதல்வரே வெளியே போக சொன்ன சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த கல்வி அதிகாரி கூறியுள்ளார். அத்துடன் ரோமியோ எதிர்ப்பு படை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல்நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதாலும், அவர்கள் வழக்கமாக ரோந்து பணிகளிலும் ஈடுபடுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.