காதலியை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட நபர்: சோகத்தில் முடிந்த கான்ஸ்டபிள்கள் காதல்
உத்தரபிரதேசத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுடும்முன்பு தன்னுடன் பணிபுரிந்த தன்னுடைய காதலியையும் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கஜ்ரவுலா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. 2018ஆம் ஆண்டு பேட்ச் கான்ஸ்டபிள்களான மேகா சௌத்ரியும், மனோஜ் துல் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கஜ்ரவுலா பகுதியிலுள்ள அவந்திகா நகரில் சௌத்ரி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். ஹரியானாவை பூர்விகமாகக் கொண்ட துல், அடிக்கடி சௌத்ரி வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்து வந்திருக்கிறார்.
சம்பவத்தன்று சௌத்ரி வீட்டிற்கு சென்ற துல், மிகவும் சத்தமாக சண்டையிட்டிருக்கிறார். திடீரென்று துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த பிரியா என்பவர் ஓடி வந்துள்ளார். வந்து பார்த்தபோது கான்ஸ்டபிள்கள் இருவரும் ரத்தவெள்ளத்தில் கிடந்திருக்கின்றனர். இதுகுறித்து அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போலீஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். சௌத்ரியின் மார்பில் துப்பாக்கிக்கொண்டு பாய்ந்திருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மனோஜ் துல் கொடுத்த அறிக்கையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், அவர் கொண்டுவந்த நாட்டுத் துப்பாக்கியால் சௌத்ரியை சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்டதாக போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கஜ்ரவுலா காவல் அதிகாரி ஆர்.பி சர்மா கூறுகையில், ‘’இந்த சம்பவம் குறித்து இன்னும் தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. இருவரும் காதலித்து வந்ததை உடன் பணிபுரிந்துவந்த காவலர்கள் உறுதி செய்துள்ளனர். சண்டைக்கு பிறகு, முதலில் சௌத்ரியை சுட்ட துல், பிறகு தன்னை சுட்டுக்கொண்டிருக்கலாம் என சந்தேக்கிறோம்’’ என்று இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கொடுத்த தகவலில் கூறியிருக்கிறார்.