இந்தியா
“இந்த செய்தித்தாளை படிங்க” - கண்ணாடியை கழட்டாத மாப்பிள்ளை.. உண்மையை வரவழைத்த மணப்பெண்!
“இந்த செய்தித்தாளை படிங்க” - கண்ணாடியை கழட்டாத மாப்பிள்ளை.. உண்மையை வரவழைத்த மணப்பெண்!
மாப்பிள்ளை கண்ணாடி போட்டபடியே இருந்ததால் சந்தேகமடைந்த மணப்பெண், செய்தித்தாளை வாசிக்க சொன்ன போது, அவர் பார்வைக் குறைபாடுடையவர் என்பது தெரியவந்தது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அர்ஜுன் சிங் என்பவர் தன்னுடைய மகள் அர்ச்சனாவிற்கு, சிவம் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்திருந்தார். அதன்படி கடந்த 20-ஆம் தேதி திருமண நாளன்று, மணமகள் மற்றும் மணமகன் இருவரும் ஊர்வலம் சென்று திரும்பிய பின்பு, பெண்ணின் குடும்பத்தினருக்கு மாப்பிள்ளை மீது சந்தேகம் வந்துள்ளது.
ஏனெனில், அவர் கண்ணாடி அணிந்தபடியே இருந்தார், அவர் அந்த கண்ணாடியை கழட்டவே இல்லை. இதனால் மாப்பிள்ளைக்கு கண் குறைபாடு ஏதேனும் இருக்குமோ? அதன் காரணமாக அவர் கண்ணாடியை கழட்டவில்லையோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அந்த சந்தேகத்தை தீர்க்க மணப்பெண், ஒரு இந்தி செய்தித்தாளை எடுத்து நீட்டி கண்ணாடி இல்லாமல் படிக்கும்படி கூறியுள்ளார். அப்போது அவர் வாசிக்க திணறியதால் மணப்பெண் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். அதன்பின், மாப்பிள்ளை வீட்டார் தங்களிடம், மாப்பிள்ளை பார்வை குறைபாடுடையவர் என்கிற உண்மையை கூறாமல் ஏமாற்றிவிட்டதாக கூறி, மணப்பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், கொடுக்கப்பட்ட வரதட்சணை அனைத்தையும் திருப்பித் தரும்படியும் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார், மாப்பிள்ளை வீட்டார் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.