உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் : அதிர்ச்சியில் தாய் மரணம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியலின இளைஞர் அடித்து துன்புறுத்தப்பட்டு பின்னர் எரித்து கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனுக்கு நேர்ந்த சம்பவத்தின் செய்தி கேட்ட அதிர்ச்சியில் அவரது தாயார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹார்டோய் மாவட்டத்தின் பாதேசா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அபிஷேக் (எ) மோனு என்ற 20 வயதுடைய பட்டியலின இளைஞர், மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மோனுவை சிலர் பிடித்து ஒரு வீட்டில் அடைத்துள்ளனர். அங்கு, அவரை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. பின்னர் அவரை அந்த வீட்டில் உயிருடன் வைத்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது. மோனுவின் அலறல் சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். பின்னர், அவரை அருகில் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து லக்னோ மருத்துவமனைக்கு மாற்றப்படார். அவருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் பழகி வந்த பெண்ணை பார்க்க மோனு சென்ற போது இது நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இது ஆணவக் கொலைதான் என மோனுவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் அவர்களது பக்கத்து வீட்டார் இருவர் என ஐவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலோக் பிரியதர்ஷி கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.