உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு எரிக்கப்பட்ட பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சிவம் மற்றும் சுபம் திரிவேதி என்ற இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் அவரை பாலியல் அடிமையாக வைத்திருந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக அப்பெண் முதலில் புகார் அளித்த போது காவல்நிலையத்தில் அதனை ஏற்கவில்லை. பின்னர் நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு காவல்துறையினர் புகாரை பதிவுசெய்துள்ளனர்.
அதன்பேரில் கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்து சிவம் என்பவரை கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான சுபம் திரிவேதி தலைமறைவாக இருந்த நிலையில் காவல்துறையினர் தேடி வந்தனர். இதில் சிவம் சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வழக்கில் ஆஜராவதற்காக அதிகாலை 4 மணி அளவில் ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
இதை அறிந்த சிவம், சுபம் திரிவேதி ஆகியோர் நண்பர்களோடு சேர்ந்து ரயில் நிலையம் அருகே அப்பெண்ணை வழிமறித்து பயங்கரமாக தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு அதிகபட்ச தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தன்னை வன்கொடுமை செய்த 2 பேர் உள்பட 5 பேர் தனக்கு தீ வைத்ததாக அப்பெண் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீ வைத்த ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
லக்னோ மருத்துவமனையில் 90 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அப்பெண் மேல் சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு போராடி வந்த அப்பெண் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என ஏற்கனவே மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அந்தபெண் நேற்றிரவு 11.40 மணியளவில் உயிரிழந்தார்.
அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் நாடே அதிர்ந்துள்ள நிலையில் உன்னாவ் கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.