உ.பி. சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: பாஜக எம்எல்ஏ கைது
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புள்ள பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மாணவி ஒருவர், தன்னை பாரதிய ஜனதா எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் கடந்த 8ம் தேதி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் அருகே தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவரை மீட்ட காவல்துறையினர் சிறுமியின் தந்தையான பப்பு சிங் என்பவரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது, புகாருக்குள்ளான பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் தனது ஆதரவாளர்களுடன், மாணவியின் தந்தையை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தந்தை உயிரிழந்தார்.இதற்கிடையில், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்ற அலகாபாத் உயர்நீதிமன்றம், விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
மிக மோசமான இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏவை கைது செய்யாமல் வெறுமனே முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்தது பேரதிர்ச்சி தருவதாகவும் நீதிபதிகள் கூறினர். இதற்கிடையே அந்த எம்எல்ஏவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் சென்கரை சிபிஐ கைது செய்தது.