
ஆந்திராவில் மருத்துவ தம்பதியினர் 'வணக்கம்' வைத்தே ஒரு கிராமத்தை, திறந்தவெளி கழிப்பிட பழக்கத்தில் இருந்து மாற்றியுள்ளனர்.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் சல்லாப்பள்ளி. அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அன்றாடம் தங்கள் காலைக்கடன்களை திறந்தவெளியிலேயே கழித்து வந்துள்ளனர். அதே கிராமத்தில் தனியார் மருத்துமனை நடத்தி வரும் மருத்துவ தம்பதியான ராமகிருஷ்ண பிரசாத் - பத்மாவதி ஆகியோர் திறந்தவெளி காலைக்கடன் கழிப்பதைக் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளனர். அவர்களின் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் அக்கிராம மக்களிடையே எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனையடுத்து 'வணக்கம்' சொல்லும் நூதன பிரசாரத்தை கையில் எடுத்த மருத்துவ தம்பதிக்கு நல்ல பலன் கிடைத்தது.
அதன்படி திறந்தவெளியில் காலைக்கடன் கழிக்க வருபவர்களிடம் சென்று இருகரம் கூப்பி 'வணக்கம்' வைப்பதை வாடிக்கையாக்கியுள்ளனர். இது அக்கிராம மக்களிடையே தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. மேலும் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் வணக்கம் வைக்கும் பிரச்சாரத்தில் கலந்துக் கொண்டனர்.
இதனையடுத்து அக்கிராம மக்கள் தாங்களாகவே கழிப்பறைக் கட்ட முன்வந்துள்ளனர். அரசாங்க உதவியும் கிடைக்க 55 கழிப்பறைகளும், 3 பொதுக் கழிப்பிடமும் அந்தக் கிராமத்தில் கட்டப்பட்டன. கழிப்பறைக் கட்டுதல் மட்டுமின்றி ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மண்புழு உரம் தயாரித்தல், மரம் நடுதல் போன்ற சுகாதார வேலைகளையும் செய்யத்தொடங்கியுள்ளனர்.
இதற்காக தொண்டு நிறுவனம் மூலம் 17 பேர் நியமிக்கப்பட்டு கிராமத்தை முழு சுகாதாரமாக மாற்றி அமைத்துள்ளனர். இது குறித்து பேசிய மருத்துவ தம்பதியான ராமகிருஷ்ண பிரசாத் - பத்மாவதி, “எங்களின் 'வணக்கம்' பிரசாரம் தொடங்கி 3 மாதத்திலேயே ஒரு கிராமமே சுகாதாரமாக மாறி உள்ளது. நூறு சதவீத சுகாதார கிராமமாக சல்லாப்பள்ளியை ஆந்திர அரசு அங்கீகரித்தது பெருமையான தருணம்” எனத் தெரிவித்துள்ளனர்.