“வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வர வேண்டாம்” - மத்திய உள்துறை அமைச்சகம் 

“வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வர வேண்டாம்” - மத்திய உள்துறை அமைச்சகம் 
“வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வர வேண்டாம்” - மத்திய உள்துறை அமைச்சகம் 

உள்ளூர் பத்திரிகையாளர்கள் தவிர்த்து வெளியில் இருந்து வரும் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அங்கு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருவதால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதனால் காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

இதையடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவுகள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளார். 11 மணிக்கு மாநிலங்களைவையிலும் 12 மணிக்கு மக்களவையிலும் அமித்ஷா பேச உள்ளார். 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவின் அத்தனை உறுப்பினர்களும் இன்று கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் விடுப்பு எடுப்பதையோ  அவைக்கு வராமல் இருப்பதையோ தவிர்க்க வேண்டும் என பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளூர் பத்திரிகையாளர்களைத் தவிர வெளியிலிருந்து வரும் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வருவதை தவிர்க்கும் படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com