போராட்ட பின்புலம்: சந்தேகம் கிளப்பும் அமைச்சர்கள்; "அரசியலற்றது" எனும் விவசாயிகள்! 

போராட்ட பின்புலம்: சந்தேகம் கிளப்பும் அமைச்சர்கள்; "அரசியலற்றது" எனும் விவசாயிகள்! 
போராட்ட பின்புலம்: சந்தேகம் கிளப்பும் அமைச்சர்கள்; "அரசியலற்றது" எனும் விவசாயிகள்! 

விவசாயிகள் போராட்டத்தின் பின்னால் வேறு சக்திகள் இருப்பதாக மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், தோமர் ஆகியோர் சந்தேகம் கிளப்பியுள்ளனர். ஆனால், தங்கள் போராட்டம் "அரசியலற்றது" என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள். சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இதனால், மத்திய அரசு நடத்தும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துகொண்டே இருக்கிறது. இதற்கிடையே, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேசினர்.

முதலாவதாக பேசிய அமைச்சர் தோமர், "விவசாய சட்டங்களின் சில விதிகளை திருத்துவதற்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளது. இப்போது விவசாயிகள்தான் அதை முடிவு செய்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு தேதியை தேர்வு செய்ய வேண்டும்" என்றார். 

அதேபோல் அமைச்சர் பியூஸ் கோயல், ``விவசாயிகளுக்கு சில சிக்கல்கள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். விவசாயிகள் வந்து எங்களுடன் கலந்துரையாடினார்கள். அதனை, நாங்கள் மதிக்கிறோம். கலந்துரையாடலின்போது எழுந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்தோம். வேறு பிரச்னைகள் இருந்தால் விவாதிக்கப்பட வேண்டும் அல்லது நடப்பு குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும். அந்த முன்மொழிவை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால், நாங்கள் அதை உங்களிடம் (மீடியா) விட்டுவிடுகிறோம்" என்றார்.

கோயல் இப்படி கூறவும், போராட்டத்தின் பின்னால் ஏதேனும் சக்தி இருக்கிறது என்று சந்தேக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, "மீடியாவின் கண்கள் கூர்மையானவை, அதைக் கண்டுபிடிக்கும் உங்களிடமே நாங்கள் விட்டுவிடுகிறோம். பத்திரிகைகள் உங்கள் விசாரணை திறன்களை வைத்து ஆராய்ந்து விவசாயிகளை பின்னால் இருந்து இயக்கம் சக்திகளை கண்டுபிடிக்க வேண்டும்" என்று இருவரும் கூறியதோடு, "முட்டுக்கட்டைகளை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும். அரசாங்கத்தின் கதவுகள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு திறந்திருக்கும்" என்றும் தெரிவித்தனர். 

திக்ரி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் உமர் காலித் மற்றும் சுதா பரத்வாஜ் போன்றோரை விடுதலை செய்ய வேண்டும் என சுவரொட்டிகள் வைத்து வலியுறுத்திய புகைப்படங்கள் வெளியானதை வைத்து அமைச்சர் இருவரும் விவசாயிகள் பின்னர் வேறு சக்திகள் உள்ளது என்றும் குற்றம் சுமத்தினர். 

ஆனால், அவர்களின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள விவசாயிகள், மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பு "அரசியலற்றது" என்று கூறியுள்ளனர். சிங்கு எல்லையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய விவசாய சங்க தலைவர் ஒருவர், பல அரசியல் தலைவர்கள் போராட்டக் களத்தை பயன்படுத்த நாங்கள் மறுத்துவிட்டோம். திக்ரி எல்லையில் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. 

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். விவசாயிகளின் எதிர்ப்பு ஓர் அரசியல் அல்ல. திக்ரி எல்லையில் நடந்த சம்பவம் விவசாயிகள் மனித உரிமை தினத்தை கடைபிடிப்பதற்கான வழிமுறையாக இருக்கலாம்" என்ற அவர், எதிர்வரும் நாட்களில் தங்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்த போவதாகவும், டெல்லிக்கு செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளையும் தடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

இதனிடையே, விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். கடந்த 8 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தியிருந்த நிலையில் நாளை டெல்லியின் முக்கிய நுழைவு வாயில் சாலைகளை முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே உத்திரப் பிரதேசம் - டெல்லி நுழைவு வாயிலையும், ஹரியான - டெல்லி நுழைவு வாயிலையும் விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக முடக்கியுள்ளனர்.

டெல்லியையும் ஜெய்பூரையும் இணைக்கக் கூடிய சாலைகளை நாளை முடக்க இருக்கிறார்கள். மேலும், சுங்கச்சாவடிகளை கைப்பற்றியபிறகு அதில் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளார். இது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் போராட்டமாக மாறியுள்ளது என்று பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வண்டிக்கட்டுக்கொண்டு டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். சுமார் 1200 டிராக்டர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com