வயது மட்டுமே காரணமா? - பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் ராஜினாமா பின்னணி

வயது மட்டுமே காரணமா? - பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் ராஜினாமா பின்னணி
வயது மட்டுமே காரணமா? - பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் ராஜினாமா பின்னணி

பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துக்கு முன்னர் முக்கியத் துறைகளை வகித்த அமைச்சர்களின் ராஜினாமாக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதவி விலகி இருக்கின்றனர்.

மோடி அரசின் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். முன்னதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், உயர்கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சதானந்த கவுடா, தாவர்சந்த் கெலாட், சந்தோஷ் குமார் கங்கவார், பாபுல் சுப்ரியோ, தாத்ரே சஞ்சய் சம்ராவோ, ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சந்திரா சரங்கி, தேபஸ்ரீ சவுத்ரி ஆகியோர் ராஜினாமா செய்தனர். என்றாலும், புதிய அமைச்சரவை பதவியேற்பு 6 மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 5.30 மணிக்கு யாரும் எதிர்பாராத விதமாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராஜினாமா செய்தார். மேலும், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் ராஜினாமா செய்தார் என்று அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பாட்னா சாஹிப்பைச் சேர்ந்த மக்களவை எம்.பி-யான ரவிசங்கர் பிரசாத், வாஜ்பாய் காலத்தில் இருந்தே மத்திய அமைச்சர் பதவியை வகித்து வருகிறார். வாஜ்பாய் அரசில் இருந்து மோடி அரசு வரை நிலக்கரி துறை, சட்டத் துறை, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அதேபோல் மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரகாஷ் ஜவடேகர், மோடி அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரத் துறை, மனிதவள மேம்பாட்டு துறை, கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனத் துறை, சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற துறை மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை போன்ற பதவிகளில் அமைச்சராக கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி இருக்கிறார்.

இப்படி மத்திய அரசில் முக்கிய பதவிகளை வகித்து வந்ததுடன், கட்சியிலும் முக்கியப் பதவிகளில் இருந்த வந்த நிலையில் பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ளது பேசுபொருளாகி இருக்கிறது. இருவரின் ராஜினாமாவுக்கு வயதே காரணம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. ஏனென்றால், ராஜினாமா செய்த 12 அமைச்சர்களும் 60 வயதை கடந்தவர்கள். அதன்படி, 70 வயதான பிரகாஷ் ஜவடேகரும், 66 வயதாகும் ரவிசங்கர் பிரசாத்தும் பதவி விலகி இருக்கின்றனர். வயது மட்டுமே காரணம் என்றால், தற்போது பதவியேற்று உள்ள அமைச்சர்களில் சிலரே 60 வயதை கடந்துள்ளனர். இது சர்ச்சைக்கு வித்திடுகிறது.

கடந்த சில மாதங்களாக மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதி விவகாரத்தில் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ரவிசங்கர் பிரசாத் மத்திய அரசாங்கத்தின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்தினார். இந்த விதியை ட்விட்டர் போன்ற சில தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்க மறுத்ததும், ஒருகட்டத்தில் மத்திய அரசு ட்விட்டருடன் முரண்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. இந்த மோதலில் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தான் ரவிசங்கர் பிரசாத் பதவி விலகியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com