சிக்கிய கருப்பு பெட்டி.. விபத்து நடந்தது எப்படி? விமானத் துறை அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். தவிர, விமானம் மோதிய குடியிருப்பில் இருந்த மருத்துவ மாணவர்களும் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில், 274 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் விமானத்தில் பயணித்த 241 பேரும் கட்டடத்தில் இருந்தவர்களில் 33 பேரும் அடங்குவர்.
இந்த நிலையில், ”விசாரணை அறிக்கை வந்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அகமதாபாத் விமான விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் இதயத்தை நொறுக்குகின்றன. உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு அனைத்து வகை உதவியும் செய்யப்படும். விசாரணையைத் தொடங்குவதற்காக அதிகாரிகள் உடனடியாகக் களத்துக்கு சென்றனர்.
விசாரணைக்காக உள்துறைச் செயலர் தலைமையில் மற்றொரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் துறை நிபுணர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தடயவியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் விசாரணையில் பங்கேற்றுள்ளனர். மேலும், விமானப் போக்குவரத்துத் துறை செயலர், உள்துறை கூடுதல் செயலர், குஜராத் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த விசாரணைக் குழுவுக்கு 3 மாதம் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் மிகவும் கறாரான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பாதுகாப்பை மேம்படுத்த புதிய வழிமுறைகள் கொண்டு வரப்படும். விசாரணை அறிக்கை வந்தபின் உரிய நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.