மேடையில் சரிந்து விழுந்தார் மத்திய அமைச்சர் கட்காரி!
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மேடையில் திடீரென சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி. இவர், அகமத்நகரில் உள்ள மகாத்மா புலே வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்தார்.
விழா மேடையில் மாநில ஆளுநர் வித்யாசகர் ராவ் உட்பட பலர் இருந்தனர். விழாவில் பேசிவிட்டு தனது இருக்கைக்கு திரும்பினார் கட்கரி. அப்போது திடீரென்று அவர் மயங்கி சரிந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை, தாங்கி பிடித்துக்கொண்டனர்.
பின்னர் அவருக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் பின்னர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.