கர்நாடகாவில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக இருந்த போதிலும், சில தொகுதிகளில் இங்கெல்லாம் நாம் வெல்ல மாட்டோம் என்ற நம்பிக்கை அந்தக் கட்சிக்காரர்களுக்கு உண்டு. அப்படிப்பட்ட தொகுதிதான் பெங்களுர் தெற்கு தொகுதி. ஆர்.எஸ்.எஸ். ஏ.பி.வி.பி. போன்றவற்றில் பங்கெடுத்து சிறப்பாக பணியாற்றி இருந்தாலும், 1990களில் அனந்த்குமாருக்கு தேர்தல் அரசியல் மிகவும் புதிது. சின்ன சின்ன கட்சி பதவிகளில் இருந்து பணியாற்றிய அவருக்கு திடீரென கிடைத்த வாய்ப்புதான் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு. அனந்த்குமாருக்கே அது வியப்பை கொடுத்தது.
காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனதா தள கட்சியின் பலம் பொருந்திய வேட்பாளர்களை தோற்கடித்து அனந்த்குமார் பெற்ற வெற்றி, அவரது கட்சியினருக்கே மிகப்பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. கர்நாடகாவில் இருந்த அனந்த்குமார் டெல்லியால் கவனிக்கப்பட்டார். அவரது அசாத்திய பேச்சாற்றலும், கட்சிப் பணிகளில் கொண்ட ஈடுபாடும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மூத்த தலைவர் அத்வானி ஆகியோரிடம் நெருக்கத்தை கொடுத்தது. 1998-ல் நடந்த தேர்தலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட சுற்றுலாத்துறை அமைச்சரானார். அப்போதைய அமைச்சரவையின் இளம் அமைச்சர் அனந்த்குமார்.
அனந்த்குமாரை எடியூரப்பா கண்டறிந்த விதமும், அவரை பயன்படுத்திக் கொண்ட விதமும் உன்னிபாக பார்க்க வேண்டியது. ஏபிவிபியில் இருந்து கட்சிக்கு வந்த அனந்த்குமாரின் கட்சிப் பணிகளையும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் முறைகளும் எடியூரப்பாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. எந்த பதவியும் இல்லாமல் சுறுசுறுப்பாக இயங்கிய அனந்த்குமாரை அழைத்தார் எடியூரப்பா. மிக நீண்ட உரையாடல். பல விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். அனந்த்குமார் அவரது அறையை விட்டு வெளியே வந்தது அறிவிப்பு பலகையில் பாஜகவில் மாநில பொதுச்செயலாளர் பதவியில் நியமனம் செய்யப்பட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதன்பிறகு நடந்த தேர்தலில் 44 இடங்களை பிடித்து எதிர்க்கட்சியானது பாஜக. அனந்த்குமாரின் அபார ஆற்றலுக்கான வெற்றி என புகழ்ந்தார் எடியூரப்பா.
அதே நேரத்தில் அனந்த்குமாரின் மற்றொரு குணம் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு எப்போதும் ஆச்சரியத்தை கொடுத்தது. தங்களது எதிரிகள் என நினைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் , ஜனதா தள கட்சியினர் பலரோடு அனந்த் குமார் நட்பு பாரட்டிய விதமே அது. காங்கிரஸ் ஆட்சியோ, பாஜக ஆட்சியோ, ஜனதா தள ஆட்சியோ, எப்போதும் மாநில நலனின் அக்கறை கொண்டு அனைத்து தலைவர்களையும் சந்தித்து பேசுவார். காங்கிரஸ் முதல்வர்கள் டெல்லி வந்தால் முதல் ஆளாகச் சென்று பார்ப்பார். இதனை கவனித்த பிரதமர் மோடி முக்கிய மசோதாக்கள் மீது எதிர்கட்சிகளின் கருத்தை பெற அனந்த்குமாரை பயன்படுத்தினார், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக நியமித்து , அவரை சரிவர பயன்படுத்தினார்
வீடில்லாமல் பெங்களூரு வீதிகளில் திரிந்து , கட்சி அலுவலகமே கதியென கிடந்து, தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு, பாஜகவை 40 ஆண்டு காலம் கர்நாடகாவில் வளர்த்தெடுத்ததில் எடியூரப்பாவுக்கு எப்படி பங்குண்டோ, அதே பங்கு அனந்த்குமாருக்கும் உண்டு. அதை எடியூரப்பாவே ஏற்றுக் கொண்டு , உடன் பிறவா சகோதரன், உடனிருக்கும் நண்பன் என குறிப்பிட்டதும் உண்டு.