கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்த்குமார் புற்றுநோயால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று அதிகாலை காலமானார். அவருக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் பாஜகவின் அசைக்க முடியாத தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார். 1959ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நாராயண சாஸ்திரி, கிரிஜா சாஸ்திரி தம்பதிக்கு பிறந்தவர் அனந்த்குமார். ஹூப்ளி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த அவர் பின்னர் சட்டப்படிப்பும் முடித்தார். நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின் பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அனந்த் குமார், 1982ஆம் ஆண்டு அந்த அமைப்பின் மாநில செயலாளராகவும், 1985ஆம் ஆண்டு தேசிய செயலாளராகவும் உயர்ந்தார்.
இதனைதொடர்ந்து 1987ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூருவில் பாஜகவின் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்த அனந்த்குமார், 1988ஆம் பாஜக மாநிலப் பொது செயலாளராகவும், 1995ஆம் ஆண்டு தேசிய செயலாளராகவும் பொறுப்பேற்றார். பெங்களூருவில் இவருக்கு செல்வாக்கு பெருகவே 1996ஆம் ஆண்டு பாஜக சார்பில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின் இதே தொகுதியில் தொடர்ந்து 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
1996ஆம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இவருக்கு பல துறையில் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.1998ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. பின் சுற்றுலாத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர்நலம், போன்ற பல்வேறு துறைகளின் அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு அவருக்கு உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து 2016ஆம் ஆண்டு கூடுதலாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,இன்று அதிகாலை 2 மணிக்கு உயிழந்தார். மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் மறைவு கர்நாடகாவில் பாஜகவுக்கு ஏற்பட்ட பேரிழப்பாக கருதப்படுகிறது.