விவசாயிகள் போராட்டத்தில் சதி என்றால் பாக்., சீனா மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்துக : சிவசேனா

விவசாயிகள் போராட்டத்தில் சதி என்றால் பாக்., சீனா மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்துக : சிவசேனா
விவசாயிகள் போராட்டத்தில் சதி என்றால் பாக்., சீனா மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்துக : சிவசேனா

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பேசியது உண்மை என்றால், உடனடியாக இரண்டு நாடுகளின் மீதும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்த வேண்டுமென சிவசேனா கட்சி கூறியிருக்கிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நாளுக்குநாள் வலுவடைந்து வரும் சூழலில், இதற்கு பின்னணியில் பாகிஸ்தான், சீனா ஆகிய அண்டை நாடுகள் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் மத்திய அமைச்சர் ரோசாஹேப் தான்வே. ஆனால் இந்த குற்றச்சாட்டு புதிதல்ல. டெல்லியில் போராட்டம் தொடங்கிய சில தினங்களிலேயே, பஞ்சாப்பை இந்தியாவிலிருந்து பிரிக்கும் காலிஸ்தான் விவகாரத்தை சொல்லி அவர்கள் தான் போராட்டத்திற்கு காரணம் என சிலர் சாயம் பூச முயன்றனர். அதற்கேற்றார் போல் சில இடங்களில் காலிஸ்தான் முழக்கங்களும் எழுந்தன. அதற்குப் பிறகு விவசாயிகள் அதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்தி விட்டனர். அமைதியான வழியில் போராடும் எங்களை பிரிவினைவாதிகள் எனச் சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கூறினர்.

இந்த நிலையில், போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பின்னணியில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இருப்பதாக மத்திய அமைச்சர் ரோசாஹேப் தான்வே கூறியது போராட்டக்காரர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீக்கிய மதத்தின் மிக முக்கிய குழுக்களில் ஒன்றான டெல்லி குருத்வாரா மேலாண்மை குழு அமைச்சரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க மத்திய அமைச்சரின் கருத்தை கிண்டல் செய்துள்ளார் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத்.

“விவசாயிகளுக்கு பின்னால் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இருப்பது உண்மை என்றால், அந்த இரண்டு நாடுகளின் மீது மத்திய அரசு சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தவேண்டும்” என நையாண்டி செய்துள்ளார் அவர். 

உடனடியாக குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் தளபதிகள் ஒன்றாக சேர்ந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். 

போராட்டத்தை கொச்சைப் படுத்திய மத்திய அமைச்சரின் வீட்டுக்குள் நுழைந்து விவசாயிகள் அவரை அடிக்க வேண்டும் என மகாராஷ்டிரா அமைச்சர் ஓம்பிரகாஷ் பாபாராவ் கடு பேசியுள்ளார். இப்படி விவசாயிகளின் போராட்டம் அரசியல் கட்சிகள் மாறி மாறி விமர்சிக்கும் தளமாக மாறியுள்ளதை காட்டுகிறது. ஆனால் இதனை வெளியில் போராடும் விவசாயிகள் யாரும் சிறிதும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com