கொரோனா பேரிடரும் மத்திய அரசும்: சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா பின்னணி

கொரோனா பேரிடரும் மத்திய அரசும்: சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா பின்னணி
கொரோனா பேரிடரும் மத்திய அரசும்: சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா பின்னணி

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்படி, புதிதாக பதவியேற்கவுள்ள 43 மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான பின்னணி இப்போது பேசுபொருளாகியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நரேந்திர மோடி, 2-வது முறையாக பிரதமராகப் பதவியேற்றப் பிறகு, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பலமுறை பேசப்பட்டது. ஆனால், மாற்றியமைக்கப்படவில்லை. மத்திய அமைச்சர்களாக 81 வரை இருக்கலாம் என்ற நிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்த்து 53 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநில மக்களை கவர வேண்டிய கட்டாயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் நிலவும் உட்கட்சி (தலைமை) பிரச்னையை சரிசெய்யும் வகையிலும், அதேபோல் கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் நிலையில் மத்திய பாஜக உள்ளது.

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிரோன்மணி அகாலி தளம் விலகியது. அதேபோல சிவசேனாவும் கூட்டணியிலிருந்து வெளியேறியது. தற்போதைய நிலையில், ராம்தாஸ் அத்வாலே மட்டுமே, பாஜக அல்லாத அமைச்சராக உள்ளார். என்றாலும், தமிழகத்தில் அதிமுக, பீகாரில் நிதிஷ் குமாரின் கட்சி போன்றவை கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுடன் நெருக்கமாக பயணித்து வருகின்றன. என்றாலும் இதுபோன்ற கட்சிகளுக்கு மத்திய அரசில் எந்த பங்கும் இல்லை.

இப்படியான நிலையில்தான் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்கவுள்ள 43 மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் உள்ளிட்ட 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் எதிரொலியாக, மத்திய அமைச்சர்கள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார், சதானந்த கவுடா, தேபஸ்ரீ சவுத்ரி, சஞ்சய் தோத்ரே மற்றும் ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் வரிசையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஹர்ஷ்வர்தனின் ராஜினாமா பேசுபொருளாகியுள்ளது. ஏனென்றால், இந்தியாவின் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான பேரிடர் போராட்டத்தை கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக தலைமை தாங்கி நடத்தி வந்தவர் அமைச்சர் ஹர்ஷ்வர்தன். என்றாலும் கொரோனா முதல் அலையின்போது இவரின் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட சுகாதாரத்துறை, ஏப்ரல் - மே மாதங்களில் நிகழ்ந்த கொரோனா இரண்டாவது அலையில் பெரிதும் தடுமாறிப் போனது. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் இருந்து இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பில் மிகப் பெரிய தோல்வி ஏற்பட்டது என்பது வரை பல்வேறு விமர்சனங்கள் மத்திய அரசை நோக்கி பாய்ந்தன.

இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மக்கள் கொத்துக்கொத்தாக கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். அவர்களின் சிகிச்சைக்கு தேவையான ஆக்ஸிஜன், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறைகள் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதையடுத்து அரசு செய்ததை விட தனியார் அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், தனி நபர்கள் ஆற்றிய உதவியால் இந்தியா இந்தப் பற்றாக்குறையில் இருந்து மீண்டு வந்தது. இதேபோல் தடுப்பூசி திட்டங்களும் எதிர்பார்த்ததுபோல் வேகமாக இல்லை. மாநில அரசுகள் இலவச தடுப்பூசி கோரி போர்க்கொடி தூக்கிய சம்பவங்களும் நடைபெற்றன.

சுகாதாரத்துறை அமைச்சர் என்கிற ரீதியில் இந்தச் சம்பவங்களுக்கு பொறுப்பாக கருதப்படும் ஹர்ஷ்வர்தனின் செயல்பாடற்ற தன்மை குறித்து பாஜக தலைமை அதிருப்தி தெரிவித்ததன் காரணமாக இப்போது ராஜினாமா செய்துள்ளார். இவர் மட்டுமல்ல, இவருக்கு துணையாக சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்து அஷ்வின் குமார் சவுத்ரியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர்களுக்குப் பதில் அடுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக யார் பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா 3-ம் அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவரும் நிலையில், இந்தியாவை அதிலிருந்து காக்க, குறைந்துள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் உள்ளிட்ட பிரச்னைகளை சுமூகமாக கையாளக் கூடிய நபராக யார் அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com