கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு இருப்பிடச் சான்றை அளிப்பது கட்டாயமல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்கம்:
'போதிய தொழில்நுட்பத் வசதிகள் இல்லாததால் வீடு இல்லாத மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் வாய்ப்பை இழப்பதாக ஒரு சில ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன. மின்னணு வாயிலாகப் பதிவு செய்யும் தேவை, ஆங்கில அறிவு, இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் செல்பேசி அல்லது கணினியின் பயன்பாடு போன்ற அம்சங்கள், இதுபோன்ற மக்கள் முன்பதிவு செய்வதற்குத் தடையாக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் அடிப்படை உண்மைகள் அற்றவை.
உண்மை நிலை இதுதான்:
1. கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய செல்பேசி வைத்திருப்பது கட்டாயமல்ல.
2. தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு இருப்பிடச் சான்றை அளிப்பதும் கட்டாயமல்ல.
3. கோவின் தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்யவேண்டிய அவசியமும் இல்லை.
4. தங்கள் வசதிக்கேற்ப 12 மொழிகளில் பயனாளிகள் கோவின் தளத்தைப் பயன்படுத்தலாம். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, வங்காளம், அசாமி, குருமுகி (பஞ்சாபி) மற்றும் ஆங்கிலம் இதில் அடங்கும்.
இணையதள வசதி அல்லது ஸ்மார்ட் செல்பேசி அல்லது செல்பேசியே இல்லாதவர்கள்கூட அனைத்து அரசு தடுப்பூசி மையங்களுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். 80% தடுப்பூசிகள் இவ்வாறு நேரடியாக வருபவர்களுக்கே செலுத்தப்பட்டுள்ளது. நேரடியாக மையங்களுக்கு செல்கையில் பதிவு செய்வதற்குத் தேவையான அனைத்து விவரங்கள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களுக்குத் தேவையான தகவல்களை தடுப்பூசியை செலுத்துவோரே மேற்கொள்வதுடன், குறைந்தபட்ச அடிப்படைத் தகவல்களை மட்டுமே பயனாளிகள் அளிக்க வேண்டும்.
மேலும், தேசிய சராசரியைவிட, பழங்குடி மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை மருத்துவ மையங்களில் தலா 26000 உட்பட 70% தடுப்பூசி மையங்கள், ஊரகப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன' என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.