'கொங்குநாடு' முழக்கமும்.. தனி மாநில கோரிக்கைகளும் - மத்திய அரசின் விளக்கம்

'கொங்குநாடு' முழக்கமும்.. தனி மாநில கோரிக்கைகளும் - மத்திய அரசின் விளக்கம்
'கொங்குநாடு' முழக்கமும்.. தனி மாநில கோரிக்கைகளும் - மத்திய அரசின் விளக்கம்

நாட்டில் ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவது என்பது கூட்டாட்சி அரசியலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு மக்களவையில் கூறியுள்ளது. அண்மையில் தமிழகத்தில் கொங்குநாடு என்ற தனி மாநில முழக்கம் எழுந்ததை இதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து சில வாரங்களில் சமூக வலைதளங்களில் திடீரென பரபரப்பாக பேசப்பட்ட வார்த்தை கொங்குநாடு. மத்திய அரசை அரசியல் சாசனத்தில் குறிப்பிடுவதுபோல ஒன்றிய அரசு என திமுக அழைக்கத் தொடங்கியது. இதற்கு எதிர்வினையாற்றுகிறோம் என்ற பெயரில் கோவையில் இருந்து கொங்குநாடு என்ற தனி மாநில முழக்கம் ஒலித்தது.

திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கொங்குநாடு விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக விவாதத் தளத்திலிருந்து மறைந்திருந்தது. இந்நிலையில் மக்களவையில் தனி மாநில பிரிப்பு சம்பந்தமாக மத்திய அரசு கூறியுள்ள ஒரு பதில் அதீத கவனம் பெறத்தக்க வகையிலும் கொங்குநாடு கோரியவர்களுக்கு புரிதலை கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் இருந்து விதர்பா என்ற தனி மாநிலத்தை உருவாக்குவது குறித்து ஏதேனும் திட்டம் இருக்கிறதா என அம்மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் மகாதியோராவ் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இது சம்பந்தமான பரிந்துரைகள் எதுவும் தங்களிடம் இல்லை எனக் கூறியுள்ளது.

மேலும் ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவது என்பது பரந்த மாற்றங்களை உள்ளடக்கியது என்றும் அது நேரடியாக நாட்டின் கூட்டாட்சி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவது என்றும் குறிப்பிட்டுள்ளது. அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டும், பரந்த ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே புதிய மாநிலத்தை உருவாக்குவது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும் எனவும் உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆந்திராவிலிருந்து ராயலசீமா, அசாமில் இருந்து போடோலாந்து, மேற்குவங்கத்தில் இருந்து கூர்காலாந்து, கர்நாடகாவில் இருந்து துளு நாடு, மத்தியப் பிரதேசத்தில் இருந்து விந்திய பிரதேசம், பீகாரில் இருந்து போஜ்புரி மாநிலம், உத்தரப் பிரதேசத்தில் இருந்து பூர்வாஞ்சல் என தனிமாநில கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன. இவை அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக பதில் சொல்லும் வகையில் தான் மத்திய அரசின் விளக்கத்தை பார்க்க வேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com