மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்? நிதி, கல்வித் துறைக்கு புதிய அமைச்சர்கள்? கூட்டணிக்கு வாய்ப்பு!
மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்பட உள்ளதாக பேசப்படும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
2027ஆம் ஆண்டு பிப்ரவரியில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளதால் அந்த மாநிலங்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களின் செயல்பாடுகள், வயது மூப்பு மற்றும் துறைகளின் செயல்திறன் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு சுமார் 12 அமைச்சர்கள் வரை மாற்றப்படலாம் அல்லது நீக்கப்படலாம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற விவகாரங்களால் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதாக டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கல்வி, நிதி போன்ற முக்கியத் துறைகளின் அமைச்சர்களில் பெரிய அளவிலான இலாகா மாற்றங்கள் இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பிற கூட்டணிக் கட்சிகளுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் இந்த விரிவாக்கம் செய்யப்படலாம் என்கின்றனர். இந்த நிலையில்தான் கடந்த23ஆம் தேதியன்று பிரதமர் மோடி குடியரசுத் தலைவரைச் சந்தித்திருந்த நிலையில், அமித் ஷாவின் தற்போதைய சந்திப்பும் அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுகளை மேலும் உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படும் சீனியர் தலைவர்கள் சிலர், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

