மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: மத்திய அமைச்சர்களாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: மத்திய அமைச்சர்களாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு
மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: மத்திய அமைச்சர்களாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புதுமுகங்கள், இணையமைச்சர்களாக இருந்தவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், பொறியாளர்கள் மற்றும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் புதுமுகமாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் இடம் பெற்றுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய எல்.முருகன் பாரதிய ஜனதாவில் இணைந்து அரசியலில் நுழைந்தார். 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் துணை தலைவராக பதவி வகித்திருக்கிறார்.

அசாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனாவாலுக்கும் இந்த முறை அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ராமாயண தொலைக்காட்சி தொடரில் ராமராக நடித்து மக்களின் அபிமானத்தை பெற்றவர். அசாமில் இருமுறை எம்எல்ஏ ஆனவர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் பாரதிய ஜனதாவில் சேர்ந்த இளம் எம்.பி, ஜோதிராதித்ய சிந்தியாவும் இம்முறை அமைச்சராகியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய அமைச்சரவையில் விளையாட்டுத் துறை இணை அமைச்சராக பதவி வகித்த கிரண் ரிஜிஜூ, நிதித்துறை இணையமைச்சராக பதவி வகித்த அனுராக் சிங் தாக்கூரும் இந்தமுறை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

மீனாட்சி லேகி. உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றியவர். நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம் பெற்றிருந்தவர். இந்தமுறை அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்.

மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில், புதிதாக 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் இருந்து 7 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். அடுத்ததாக குஜராத்தில் இருந்து 5 பேரும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கத்தில் இருந்து தலா 4 பேரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

அனுபிரியா சிங் படேல், ஷோபா கரண்லாஜே, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், மீனாட்சி லேகி, அன்னபூர்ணா தேவி, பிரதிமா பவுமிக், பாரதி பிரவின் பவார் ஆகிய 7 பெண்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com