பருத்தி முதல் நெல் வரை... உயர்த்தப்பட்ட அடிப்படை ஆதார விலை எவ்வளவு? - முழு விவரம்
நெல் உள்ளிட்ட குறுவை சாகுபடி விளை பொருட்களுக்கான அடிப்படை ஆதார விலையை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 1,868 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில் அது 1,940 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு குவிண்டாலுக்கு 72 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோதுமை ஒரு குவிண்டாலுக்கு 2620 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 118 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 2,758 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கம்புக்கான அடிப்படை ஆதார விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 2,250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ராகியை பொருத்தவரை ஒரு குவிண்டாலுக்கு 3,295 ரூபாய் இருந்த நிலையில் அது 82 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 3,377 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துவரம்பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்றுக்கு பொருத்தவரை குவிண்டாலுக்கு 300 ரூபாய் அதிகரிக்கப்பட்டு அடிப்படை ஆதார விலை 6,300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
பாசிப்பருப்பு 7,196 ரூபாய் இருந்த நிலையில் 79 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 7,275 ரூபாயாக அடிப்படை ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நிலக்கடலையை பொருத்தவரை ஒரு குவிண்டாலுக்கு 275 ரூபாய் உயர்த்தப்பட்டு 5,550 ரூபாயாக அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
சூரியகாந்தி விதையைப் பொருத்தவரை ஒரு குவிண்டாலுக்கு 130 ரூபாய் அதிகரிக்கப்பட்டு அடிப்படை ஆதார விலை 6,015 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எள்ளு அடிப்படை ஆதார விலை 6,885 ரூபாய் என்பதிலிருந்து 452 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 7,307 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பருத்திக்கான அடிப்படைகளும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு குவிண்டாலுக்கு 211 ரூபாய் உயர்த்தப்பட்டு, 5,726 ரூபாயாக அடிப்படை ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு இந்த அடிப்படை ஆதார விலை உயர்வு பெருமளவில் பலனளிக்கும் என வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
- நிரஞ்சன் குமார்