பட்ஜெட் 2021: வருவாயைப் பெருக்கும் மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன?

பட்ஜெட் 2021: வருவாயைப் பெருக்கும் மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன?
பட்ஜெட் 2021: வருவாயைப் பெருக்கும் மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன?

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கொரோனா காலகட்டத்தில் 800 மில்லியன் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டது. கொரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்க, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் அளவுக்கு, அதாவது சுமார் 27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும்.

இரண்டு உலகப் போர்களுக்கு பிறகு தற்போது உள்ள நிலையும், சமூக பொருளாதார மறு உருவாக்கம் தேவைப்படக்கூடிய அளவில் இருக்கிறது. உலகளாவிய பெருந்தொற்று காரணமாக சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும், மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது" என்றார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதித்துறை சார்ந்த திட்டங்கள், தொழில் முன்னேற்றத்துக்கு துணைபுரியும் அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அவற்றின் முக்கிய அம்சங்கள்:

> முதலீட்டு நிதிநிலையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிடும் போது அது 34.5 சதவீதம் உயர்வு.

> நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்குள் இந்த நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க திட்டம்.

> வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டம்.

> வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

> ரயில்வேத் துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலமாகவும், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

> வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. வரும் ஐந்தாண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்காக 1,624 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

> காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீத அளவுக்கு, பாதுகாப்பு விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

> நிறுவனங்கள் சட்டம் 2013, சிறிய நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருத்தியமைக்கப்படவுள்ளது.

> இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார் மயமாக்கப்படவுள்ளன.

> எல்ஐசியின் தகுந்த சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பங்குகள் வெளியிடப்படவுள்ளன.

> மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம்.

> அரசின் வருவாய் ஈட்டாத சொத்துக்களை கண்டறிந்து அவற்றை வருவாய்க்கு உரியதாக ஆக்க தனி அமைப்பு (SPV) ஏற்படுத்தப்படும்.

> பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.1,75,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்.

> புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.

> பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம். பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு

> உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு

> தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றியமைப்பு

> வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாடு தீர்வை விதிக்க திட்டம்

> சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

> கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

> குஜராத்தில் பொருளாதார தொழில்நுட்ப முனையம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com