பொது சிவில் சட்டம்; பிரதமரின் பேச்சுக்கு காங்., திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு - ஆம் ஆத்மி ஆதரவு

பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி ஆதரவு தெரிவித்துள்ளது.
modi
moditwitter
Published on

மத்தியப் பிரதேசத்தில் நேற்று, 5 வந்தே பாரத் ரயில்களை கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, போபாலில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “முத்தலாக் இஸ்லாமிய மதத்தில் அவசியமானது என்றால் எதற்காக பல இஸ்லாமிய நாடுகளில் அது தடை செய்யப்பட்டுள்ளது. முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் வாக்கு வங்கி பசியில் இருக்கிறார்கள்.

அவர்கள் இஸ்லாமிய பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். ஒரு குடும்பம் இரு விதிமுறைகளின்கீழ் இயங்குமா? அதேபோல் ஒரு நாடு எப்படி இருவிதமான சட்டங்களின்கீழ் செயல்படும்? இந்தச் சட்டத்தின் பேரில் எதிர்கட்சியினர் மக்களைத் தூண்டி விடுகிறார்கள். அப்படி அரசியல் செய்பவர்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எதிர்கட்சியினரின் அரசியலுக்கு பலியாகும் இஸ்லாமிய மக்களிடம் பாஜகவினர் பொது சிவில் சட்டத்தை பற்றி தெரியப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பொது சிவில் சட்டத்தை, ஒரு நிகழ்ச்சி நிரலால் இயங்கும் பெரும்பான்மை கொண்ட அரசால் மக்களிடையே திணிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறு பயிற்சி என்பது போல் பிரதமர் மோடி மக்களிடையே தோன்றச் செய்கிறார்.

ஆனால், அது சாத்தியமில்லை என்ற கடந்த சட்ட ஆணையத்தின் அறிக்கையை அவர் படிக்க வேண்டும். பாஜகவின் சொல்லாலும் செயலாலும் தேசம் இன்று பிளவுபட்டுள்ளது. பொதுசிவில் சட்டம் மக்களிடையே திணிக்கப்பட்டால் அது பிளவை மேலும் விரிவுபடுத்தவே செய்யும்” எனப் பதிவிட்டுள்ளார்

ப.சிதம்பரம், துரை வைகோ
ப.சிதம்பரம், துரை வைகோtwitter

ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ, “நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் கலவரம் இதற்கெல்லாம் பதில் கூறாமல், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பா.ஜ.க.வினர் பொது சிவில் சட்டம் குறித்து இப்போது பேசுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “பொது சிவில் சட்டம் முதலில் இந்து மதத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பட்டியல் பிரிவினர், பழங்குடியினர் உள்பட அனைத்து தரப்பினரும் நாட்டில் உள்ள எந்தவொரு கோயிலிலும் பூஜை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

டி.கே.எஸ். இளங்கோவன், சந்தீப் பதக்
டி.கே.எஸ். இளங்கோவன், சந்தீப் பதக்twitter, ani

இந்த நிலையில், பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சந்தீப் பதக், "கொள்கை அளவில் நாங்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறோம். அரசியலமைப்பின் 44வது பிரிவும் அதையேதான் வலியுறுத்துகிறது. ஆனால் இது அனைத்து மதங்களையும் தொடர்புடையது என்பதால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் முன்பு, பரந்த அளவில் ஆலோசனை நடத்த வேண்டும். ஒருமித்த கருத்து உருவான பிறகு இதில் அடுத்தகட்ட நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும். நீங்கள் அரசியலமைப்பின் 44வது பிரிவை எடுத்துப் பார்த்தீர்கள் என்றாலும், நாட்டிலும் அது பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாகவே இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com