ஆண்களைவிட 2 மடங்கு குறைந்துபோன பெண்களின் வேலைவாய்ப்பு
இந்தியாவின் வேலை வாய்ப்பின்மையின்படி ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் பாலின சேர்க்கை ரீதியிலான பணியமர்த்தல் என்ற தலைப்பின் கீழ் ஹார்வேர்ட் பல்கலைக்கழக இரண்டு மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களின் ஆய்வின்படி ஒரே மாதிரியாக கல்வித்தகுதி இருந்தும், நகர சூழலில் 8.7 சதவீத பெண்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கின்றனர் என்றும், அதேவேளையில் ஆண்கள் 4 சதவீதம் வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வேலைகளை அணுகுவதில் ஆண்களுடன் ஒப்பிடும்போது கூடுதல் தடைகளை பெண்கள் எதிர்கொள்வதாகவும், பெண்கள் வேலை தேடும் திறனை பாதிக்க பல காரணிகள் உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய அரசியலமைப்பின் படி வேலைவாய்ப்பில் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடு சட்டவிரோதமானது என்றாலும், இந்திய சந்தைகள் வேலைவாய்ப்பில் பாலின பாகுபாட்டையே கடைபிடிக்கின்றன என்பது ஆய்வின் மூலம் தெளிவாக தெரிவதாகவும் ஆய்வை நடத்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகுதிகள் மற்றும் அனுபவம், ஆட்சேர்ப்பு மற்றும் விண்ணப்பிப்பதற்கான தேர்வு, விண்ணப்ப செயல்முறை என்ற மூன்று நிலைகளில் வேலை வாய்ப்பை பெறுவதில் பெண்கள் பல தடைகளை சந்திப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பில் பாலினம் என்பதை கடந்து அதிக அளவு செயல்திறன் மற்றும் புதுமை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆய்வு தெளிபடுத்துவதாகவும் ஆய்வு மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வேலைவாய்ப்பில் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்தால், இந்திய உள்நாட்டு உற்பத்தி 27 சதவீதம் அதிகரிக்கும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.