சடலங்கள் விற்பனை.. ரூ.3.66 கோடி.. வருவாய் ஈட்டிய கேரள அரசு!

கேரளாவில் உரிமை கோரப்படாத சடலங்களை விற்றதில் அம்மாநில அரசுக்கு ரூ.3.66 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
model image
model imagetwitter

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் உரிமை கோரப்படாத சடலங்களை 2008-ஆம் ஆண்டுமுதல் அம்மாநில அரசு விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 16 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பரியாரம் மருத்துவக் கல்லூரி (166), திருச்சூர் மருத்துவக் கல்லூரி (157) மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (99) சடலங்களை வழங்கியுள்ளது.

இதில் பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாய்க்கும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாய்க்கும் விற்றுள்ளது கேரள அரசு. இதில் மொத்தமாக 3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2000-களின் தொடக்கத்தில்தான் கேரள மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கின. அந்த ஆண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்வி நோக்கங்களுக்காக வாரிசுகள் இல்லாமல் இறந்த உடல்களைப் பெற அனுமதிக்கும் சிறப்பு ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆய்வு நோக்கத்திற்காக அதிகமான சடலங்கள் தேவைப்படுகின்றன. அதாவது, 60 மாணவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரியில் ஆய்வுக்காக 5 பேர் சடலம் என மருத்துவ விதி கூறுகிறது. அதன்படி பார்த்தால், மருத்துவக் கல்லூரியில் சேரும் ஒவ்வொரு 12 மாணவருக்கும் 1 சடலம் தேவைப்படுகிறது.

எனினும், 2008-ல் இறந்த உடல்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் உத்தரவு இயற்றப்படுவதற்கு முன்பு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் எப்படி சடலங்களைப் பெற்று மாணவர்களுக்கு ஆய்வு நடத்தியது என்பது இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இதுசம்பந்தமாக, கேரள உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக தொடரப்பட்ட வழக்கு, மாநிலங்களவையில் நடந்த விவாதங்களுக்குப் பிறகு மேற்கண்ட உத்தரவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com