முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!

முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!

இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்ட பெரிய அணைகள், 2025-ஆம் ஆண்டில் சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும். மேலும், உலகெங்கிலும் இதுபோன்ற பழைய கட்டமைப்புகள் வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக இருக்கும் என ஐ,நா ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக, 2050களில் பூமியில் உள்ள பெரும்பாலான மக்கள் 20-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான அணைகளை நம்பியே வாழ்வார்கள் என்றும் அந்த அறிக்கை மேற்கோள்காட்டியுள்ளது.

'பழமையான நீர் உள்கட்டமைப்பு: வளர்ந்து வரும் உலகளாவிய ஆபத்து' என்கிற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கனேடிய அடிப்படையிலான நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில்தான் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

இந்த அறிக்கையில், ``உலகெங்கிலும் உள்ள 58,700 பெரிய அணைகளில் பெரும்பாலானவை 1930 முதல் 1970 வரை 50-ல் இருந்து 100 ஆண்டுகள் வரை தாங்கக் கூடிய வடிவமைப்புடன் கட்டப்பட்டவை. ஒரு பெரிய கான்கிரீட் அணை 50 ஆண்டுகளில், பெரும்பாலும் பழமையான அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கும்.

பழமையான அணைகளால், அணை பழுது மற்றும் பராமரிப்பு செலவுகளை படிப்படியாக அதிகரித்தல், நீர்த்தேக்கத்தில் வண்டல் மண் அதிகரிப்பு, அணையின் செயல்பாடு மற்றும் செயல்திறன் பாதிப்பு என அடுத்தடுத்து பல பாதிப்புகள் ஏற்படும். மேலும், 2050 வாக்கில், பூமியில் உள்ள பெரும்பாலான மக்கள் 20-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெரிய அணைகளை நம்பியே வாழும் நிலை ஏற்படும்.

அமெரிக்கா, இந்தியா, கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் பழமையான அணைகள் எண்ணிக்கை அதிகரிக்கும். 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதிகளவு பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளது. அப்போது இருந்ததை போல மற்றொரு பெரிய அணை கட்டும் புரட்சியை உலகம் காண வாய்ப்பில்லை. ஆனால், அப்போது கட்டப்பட்ட அணைகள் தவிர்க்க முடியாமல் அவற்றின் வயதைக் காட்டும்.

சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நான்கு ஆசிய நாடுகளில் 32,716 பெரிய அணைகள் (உலகின் மொத்தத்தில் 55 சதவீதம்) காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான அணைகள் விரைவில் 50 ஆண்டுகளை தொடப்போகின்றன. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல பெரிய அணைகளின் நிலைக்கும் இதுவே பொருந்தும்" என்று கூறப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நிலை?

இதே அறிக்கை தமிழகம் - கேரளம் இடையே பிரச்னையான அணையான முல்லைப் பெரியாறின் நிலைப் பற்றியும் பேசியுள்ளது. ``100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் வயது 2050-ல் 150 ஆக இருக்கும். ஒருவேளை இந்த அணை செயலிழக்கும் பட்சத்தில் சுமார் 3.5 மில்லியன் மக்கள் ஆபத்தில் இருப்பர். ஆனால், முல்லைப் பெரியாறு அணை கான்கிரீட் 'சுர்கி' (சுண்ணாம்பு மற்றும் எரிந்த செங்கல் தூள் ஆகியவற்றின் கலவையாக) கட்டப்பட்டுள்ளது.

நில அதிர்வு நிறைந்த பகுதியில் உள்ள இந்த அணை குறிப்பிடத்தக்க கட்டமைப்பு குறைபாடுகளைக் காட்டுகிறது. இதன் மேலாண்மை கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையிலான ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாகும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அணைகள்!

இந்தியாவில், 2025 ஆம் ஆண்டில் சுமார் 50 வயதுடைய 1,115-க்கும் மேற்பட்ட பெரிய அணைகள் இருக்கும். நாட்டில் 4,250 க்கும் மேற்பட்ட பெரிய அணைகள் 2050-ஆம் ஆண்டில் 50 வயதுக்கு மேற்பட்டதாக இருக்கும். மேலும் 64 பெரிய அணைகள் 2050-ஆம் ஆண்டில் 150 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.

நன்கு வடிவமைக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட மற்றும் பராமரிக்கப்படும் அணைகள் 100 வருட சேவையை எளிதில் அடைய முடியும். அமெரிக்காவில், 90,580 அணைகளின் சராசரி வயது 56 ஆண்டுகள். 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க அணைகளில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமானவை. மேலும் 75 சதவிகித அமெரிக்க அணை தோல்விகள் 50 வயதிற்குப் பிறகு நிகழ்ந்தன. அமெரிக்க அணைகளை புதுப்பிக்க 64 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும்.

கடந்த 30 ஆண்டுகளில் 21 அமெரிக்க மாநிலங்களில் கிட்டத்தட்ட 1,275 அணைகள் அகற்றப்பட்டன; 2017-இல் மட்டும் 80 அணைகள் அகற்றப்பட்டுள்ளன. உலகெங்கிலும், பெரிய அணைகளுக்குப் பின்னால் சேமிக்கப்படும் மிகப்பெரிய நீரின் அளவு 7,000 முதல் 8,300 கன கிலோமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது - கனடாவின் நிலப்பரப்பில் 80 சதவீதத்தை ஒரு மீட்டர் நீரின் கீழ் மறைக்க இது போதுமானது

கடந்த நான்கு தசாப்தங்களில் பெரிய அணை கட்டுமானத்தின் வேகம் வியத்தகு முறையில் வீழ்ச்சியடைந்து, தொடர்ந்து குறைந்து வருகிறது. ஏனெனில் உலகளவில் இதுபோன்ற அணைகளுக்கான சிறந்த இடங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. உலகளாவிய நதி அளவுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் ஏற்கெனவே துண்டு துண்டாக அல்லது அணைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அணைகளின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் மற்றும் குறிப்பாக பெரிய அணைகள் குறித்தும் வலுவான கவலைகள் உள்ளன, அத்துடன் மாற்று வகை நீர் சேமிப்பு, இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகள் மற்றும் நீர் மின்சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் உற்பத்தி வகைகள் பற்றிய வளர்ந்து வரும் யோசனைகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன.

பொதுப் பாதுகாப்பு, அதிகரிக்கும் பராமரிப்பு செலவுகள், நீர்த்தேக்கத்தில் அதிகரிக்கும் வண்டல் மண் மற்றும் இயற்கை நதி சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பது ஆகியவை அணை நீக்கம் செய்யப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும். ஒட்டுமொத்தமாக, நீர் சேமிப்பு உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்த ஒட்டுமொத்த திட்டமிடல் செயல்பாட்டில் அணை கட்டுவதைப் போலவே அணை நீக்குதலும் சமமாகக் காணப்பட வேண்டும்" என்று ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் இணை எழுத்தாளர் விளாடிமிர் ஸ்மக் என்பவர், ``பழமையான நீர் சேமிப்பு உள்கட்டமைப்பின் தவழும் பிரச்னை குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதும், வளர்ந்து வரும், அதிகரித்து வரும் இந்த நீர் அபாயத்தை சமாளிக்க சர்வதேச முயற்சிகளைத் தூண்டுவதும் இந்த அறிக்கையின் நோக்கமாகும்.

இதுமாதிரியான பெரிய அணையின் கட்டமைப்புகள் பலமாக இருந்தாலும், அவற்றின் பலத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், அதிதீவிர மழை போன்ற பெரிய அளவில் காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதை சுட்டிக்காட்டுவதே எங்கள் அறிக்கையின் நோக்கம். அணைகளை புதிதாக கட்டுவதை போலவே, பழைய அணைகளை நீக்கி புதிய அணைகளை உருவாக்குவது குறித்தும் அரசுகள் சிந்திக்க வேண்டியதும் அவசியம்" என்று வலியுறுத்தியுள்ளார்.

- மலையரசு

தகவல் உறுதுணை: The News Minute

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com