’காஸாவில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் மோசமாக இருக்கு’ - ஐநா மனித உரிமைகள் ஆணையம் கவலை!
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கிவரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது. இதனால் போர், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்களைத் தவிர இந்தப் போரில் 45 ஆயிரத்திற்கும் (45,338) மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், போர் காரணமாக சுமார் 12 லட்சம் பேர், தங்கள் இடங்களைவிட்டு வெளியேறி உள்ளனர். இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இங்கு போர் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது.
இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே, கடந்த நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், காஸாவில் உள்ள மருத்துவமனைகள் மோசமான நிலையில் உள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணைய தலைவர் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஆணைய தலைவர் வோல்கர் டர்க், தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களால் காஸாவில் மோசமான சூழல் நிலவுவதாகவும், மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2023 அக்டோபர் முதல் காஸாவில் உள்ள மருத்துவமனைகள் மீது 136 முறை இஸ்ரேல் படைகள் தாக்குதல்களை நடத்தி உள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த தாக்குதல்கள் மருத்துவ உள்கட்டமைப்புகளை சிதைத்துள்ளதாக தெரிவித்தார். காஸாவில் உள்ள மருத்துவமனைகள் மரணக் குழிகளாக மாறிவிட்டதாக ஐநா மனித உரிமைகள் ஆணைய தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.