பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு? கைது செய்யப்பட்ட பிரிட்டன் சீக்கியர்.. 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீன்!
ஸ்காட்லாந்தின் டம்பார்டனைச் (Dumbarton) சேர்ந்த 39 வயதான ஜக்தார் சிங் ஜோஹல், கடந்த 2017ஆம் ஆண்டு தனது திருமணத்துக்காக இந்தியா வந்திருந்தபோது பஞ்சாபில் கைது செய்யப்பட்டார். இந்தியாவிலிருந்து பஞ்சாபை தனி சீக்கிய நாடான “காலிஸ்தான்” ஆகப் பிரிப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் லிபரேஷன் ஃபோர்ஸ் (Khalistan Liberation Force - KLF) அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், பஞ்சாபில் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் தொடர் கொலைகள் தொடர்பான சதித்திட்டத்தில் அவர் பங்கேற்றதாகவும் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) குற்றஞ்சாட்டியிருந்தது.
ஜக்தார் சிங் ஜோஹல் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் கொலை, கொலைச் சதி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தது உள்ளிட்ட தீவிர குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஜோஹல் தொடர்ந்து மறுத்து வந்தார். தான் எந்தவொரு கொலைச் சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை என்றும், விசாரணையின்போது தாம் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
தொடர்ந்து, ஜக்தார் சிங் ஜோஹல் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நீண்டகால நீதிமன்ற தடுப்புக் காவல் குறித்து சர்வதேச அளவிலும் கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள் குழு, ஜோஹல் நீண்ட காலமாக விசாரணைக்கு முன்பே சிறையில் வைக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நீண்ட காலம் நீடிப்பதாகவும், இதனால் அவர் பல ஆண்டுகளாக சிறையிலேயே தனது வாழ்க்கையை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இந்த வழக்கில் நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வருவது "நீதியின் பெரும் தவறு" எனவும் ஐநா நிபுணர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கிடையில், ஜோஹல் கைது செய்யப்பட்டதில் இருந்தே இந்த விவகாரம், பிரிட்டன் அரசின் கவனத்திலும் இருந்து வருகிறது. அவருக்கு உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், வழக்கு விசாரணை விரைவாக நடைபெற வேண்டும் என்றும் பிரிட்டன் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தான், நீண்ட காலமாக சிறையில் இருந்த ஜோஹலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது.

