'ஆதார் தகவல்களைப் பயன்படுத்தி பாஜக பரப்புரை' - குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஆணையம்

'ஆதார் தகவல்களைப் பயன்படுத்தி பாஜக பரப்புரை' - குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஆணையம்
'ஆதார் தகவல்களைப் பயன்படுத்தி பாஜக பரப்புரை' - குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஆணையம்

ஆதார் விவரங்கள், தனியாருக்கு அளிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் தவறானவை என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்துக்கு ஆதார் தகவல்களை பாஜக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விளக்கம் கவனம் பெறுகிறது.

இதுதொடர்பாக, பெங்களூரு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) துணைத் தலைமை இயக்குநர் ஆர்.எஸ். கோபாலன், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகள்) சட்டம் 2016 (ஆதார் சட்டம்)-இன் விதிகளின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அதிகார அமைப்பு ஆகும். இந்த சட்டத்தின் 3-வது பிரிவின்படி, வாழுநர் (Resident) வழங்கும் டெமொக்ராபிக் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை சரிபார்த்து சேகரித்து இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் 'ஆதார்' என்ற 12 இலக்க தனிப்பட்ட அடையாளத்தை வழங்குவது இந்த அமைப்பின் பணியாகும்.

ஆதாரின் நோக்கம் சரிபார்க்கக்கூடிய அடையாளத்தை வழங்குவதாகும், இது திறமையான, வெளிப்படையான, நல்லாட்சிக்கும், மானிய சலுகைகள் மற்றும் சேவைகளுக்கும் பயன்படுகிறது.

ஆதார் சட்டத்தில் உள்ளபடியும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படியும் அடையாளத் தகவல் மற்றும் தனிநபர்களின் அங்கீகார பதிவுகளின் பாதுகாப்பை UIDAI உறுதி செய்கிறது. UIDAI-ஆல் சேகரிக்கப்பட்ட தகவல்கள், ஆதார் எண்கள் அங்கீகாரத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட மாட்டாது.

அடையாளத் தகவல் அல்லது அங்கீகாரப் பதிவுகள் உட்பட எந்தவொரு தகவலையும் (முக்கியமான பயோமெட்ரிக் தகவல்களைத் தவிர) உயர் நீதிமன்றத்தின் நீதிபதியின் உத்தரவின்படி மட்டுமே வெளியிட முடியும். மேலும், இது UIDAI மற்றும் சம்பந்தப்பட்ட ஆதார் எண் வைத்திருப்பவர் ஆகியோருக்கு, சட்டத்தின் பிரிவு 31-ன்படி விசாரணைக்கான வாய்ப்பை வழங்கிய பிறகு மட்டுமே வெளியிட முடியும்.

UIDAI தனது அங்கீகரிக்கப்பட்ட பயனீட்டு நிறுவனங்களைத் தவிர வேறு எந்த நிறுவனத்துடனும் எந்த தரவையும் பகிரவில்லை. மேலும், பயனீட்டு நிறுவனங்கள், வாழுநர்களின் ஆதார் விவரங்கள் பற்றிய எந்த தகவலையும் சேமிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது.

'ஆதார் சட்டத்தில் உள்ள தகவல்களைத் தவிர வேறு நோக்கங்களுக்காக UIDAI வாழுநர்களின் விவரங்களை மொத்தமாக பகிர்ந்து கொண்டுள்ளது' என்ற சமீபத்திய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. UIDAI எப்போதும் வாழுநர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எனது சொந்த பின்னணி விவரங்களை புதுச்சேரி பாஜக கட்சி பெற்று அதன் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆதார் அட்டைக்காக கொடுத்த விவரங்கள் எப்படி அரசியல் கட்சிக்கு சென்றது. இது தொடர்பாக புதுச்சேரி சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே அது குறித்து புலன் விசாரணை நடத்தவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், “குறுந்தகவல் மூலம் பரப்புரை மேற்கொள்ள பாஜக தரப்பில் முன் அனுமதி பெறப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சைபர் க்ரைம் போலீசார் அறிக்கை வெளியிட்டப்பிறகு, அது குறித்தான முடிவு எடுக்கப்படும். அதற்கு சிறிது கால அவகாசம் தேவை” என குறிப்பிட்டது.

அதனைத்தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, அப்படியானால் விசாரணை முடியும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், "உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை விசாரணையின் முடிவில் வெளியிடப்படும் அறிக்கையின்படி முடிவெடுக்கப்படும். அந்த முடிவு தகுதி நீக்கம் தொடர்பான முடிவாக இருக்கலாம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com