“வேறு முறையில் தகவலை பெற்று ஏமாற்றும் ஹேக்கர்” - ஆதார் தலைமை அதிகாரி
'ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவை' என்று டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷர்மா, ட்விட்டரில் பதிவிட்டிந்திருந்தார். ’உங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தால் உங்களின் ஆதார் எண்ணை வெளிப்படையாக வெளியிடுங்கள்’ என்று சவால் விட்டிருந்தார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கர் ஒருவர்.
உடனடியாக, தனது ஆதார் எண்ணை பதிவிட்ட ஷர்மா, “உங்களுக்கு சவால் விடுகிறேன். இந்த ஆதார் எண்ணை வைத்து உங்களால் ஏதாவது தீங்கு ஏற்படுத்த முடியுமா? ‘ என்று சவால் விட்டிருந்தார்.
ஆனால் ஷர்மா பதிவிட்ட சில மணி நேரத்திலேயே அந்த ஹேக்கர், ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய தகவல்கள் என்று கூறி சிலவற்றைப் பதிவிட்டார். செல்போன் எண், அந்த எண்ணின் வாட்ஸ் ஆப் முகப்புப் புகைப்படம், பான் எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை அவர் பதிவிட்டார். எலியட் அல்டர்சன் என்கிற பெயரில், ஷர்மாவின் ட்விட்டருக்கு அவர் பதில் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
(இதையும் படிங்க : ஆதாரின் நம்பகத்தன்மையை நீருபிக்க பதிவிட்டேன் - ட்ராய் தலைவர் விளக்கம்)
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் பதிவிட்ட ஷர்மா, 'செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக சவால் விடுக்கவில்லை. என் ஆதார் எண் மூலம் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், என்ன செய்யமுடியும் என்றுதான் சவால் விட்டேன்’ என்று கூறியிருந்தார்.
(இதையும் படிங்க : ட்ராய் தலைவரின் ஆதார் பாதுகாப்பு சவால் - தோற்கடித்த ஹேக்கர்)
இந்நிலையில் ஷர்மா தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பாக ஆதார் தலைமை அதிகாரி அஜய் பாண்டே விளக்கமளித்துள்ளார். அதில், “ட்ராய் தலைவர் ஷர்மா தனது ஆதார் எண்ணைப் பகிர்ந்து, ஹேக்கர்கள் இதன் மூலம் தீங்கு விளைவிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். ஒரு மோசடி ஹேக்கர், ஷர்மாவின் தகவல்களை ஆதார் மூலமாக பெற்றதாக, பிரபலமடையும் நோக்கில் கேவலமாக தெரிவித்துள்ளார். அந்த ஹேக்கர் ஷர்மாவின் தகவல்களை பல்வேறு முறையில் பெற்றுள்ளார். ஷர்மாவின் தொலைபேசி எண் என்.ஐ.சி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஷர்மா தொழில்நுட்ப செயலராகவும், என்.ஐ.சி தலைவராகவும் இருக்கிறார். அவரது பிறந்த தேதி, சிவில் பட்டியலில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தகவல் மூலம் பெறப்பட்டுள்ளது. இது பொது இணையதளம் ஆகும். அத்துடன் ட்ராய் இணைய தளத்தில் இருந்து ஷர்மாவின் முகவரி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு பல இடங்களில் தகவலை பெற்று, ஆதார் மூலம் பெற்றதாக. கேவலமான பிரபலத்திற்கு அந்த ஹேக்கர் பதிவிட்டுள்ளார். ஆதார் மிகவும் பாதுகாப்பானது” என்று தெரிவித்துள்ளார்.